இரண்டு அதிகார அணிகளின் தோற்றமே பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படக் காரணம்

19ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக இரண்டு அதிகார அணிகள் தோன்றியதாலேயே தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால.டி.சில்வா குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதி, பிரதமர் என இரண்டு அதிகார அணிகள் உருவாகியதால் அதிகாரிகளுக்கு உரிய தீர்மானங்களை எடுக்க முடியாது போனது என்றும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நிமல் சிறிபால.டி.சில்வா இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.

இதனால் தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்காது தொடர்ந்தும் பலப்படுத்த வேண்டும் என சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசியலமைப்புப் பேரவையை நாம் உருவாக்கினோம். இதனால் நியமிக்கப்பட்ட பொலிஸ் மாஅதிபர், சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை. அதுமாத்திரமன்றி சிவில் சமூகப் பிரதிநிதிகளால் அரசியலமைப்புப் பேரவை கட்டுப்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன.

இதுபோன்ற நிலைமைகளால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படலாம் என்பதாலேயே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதனை மேலும் பலப்படுத்த வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் குறித்து மேற்பார்வைக் குழுவில் விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

இந்தச் சட்டமூலமானது பயங்கரவாதிகளுக்கு எந்தவிதமான மரணதண்டனையையும் வழங்கவில்லை. ஆயுட்தண்டனையையே பரிந்துரைத்துள்ளது. அது மாத்திரமன்றி ஒருவரை கைதுசெய்தால் அது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.

மேலைத்தேய நாடுகளின் தேவைக்கு ஏற்ப இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பின்லாடனை சுட்டுக் கொண்டபோது அமெரிக்கா எந்தவொரு மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கவில்லை என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை