தென்னாபிரிக்கா- இங்கிலாந்து முதல் ஆட்டத்தில் பலப்பரீட்சை

12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட்:  இன்று கோலாகல ஆரம்பம்

 12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரங்களில் இன்று 30 ஆம் திகதி தென்னாபிரிக்க- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் முதல் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.நான்கு வருடங்களுக்கொரு முறை நடைபெறும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகிறது

இம்முறை சர்வதேச தர வரிசையில் முதல் எட்டு இடங்களிலுள்ள இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய 8 அணிகள் நேரடியாகவும், தகுதிச்சுற்றில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உட்பட தொடரில் 10 அணிகள் களமிறங்குகின்றன. முதல் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் ஒவ்வொரு ஆட்டத்தில் மோத வேண்டும். அவ்வடிப்படையில் ஒவ்வொரு அணியும் 9 ஆட்டங்களில் மோதி இறுதியாகப் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும். அரை இறுதிப் போட்டிகள் ஜுலை 9ம், 11ம் திகதிகளிலும், 14ம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.

மொத்தமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ள இத்தொடரில் சம்பியனாகும் அணிக்கு 70 கோடி ரூபாவும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 35 கோடி ரூபாவும் வழங்கப்படவுள்ளன. அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு 13 கோடி ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதோடு மொத்தமாக 175 கோடி ரூபா பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

உலகக் கிண்ண வரலாற்றில் டெஸ்ட் வரம் பெற்ற நாடுகள் மட்டும் பங்கு கொள்ளும் உலகக் கிண்ணத் தொடராக இத் தொடர் அமைந்துள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் 1975ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக கலந்து கொண்ட சிம்பாப்வே அணியும் கடந்த வருடம் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அயர்லாந்து அணியும் தெரிவாகவில்லை.

இம்முறை போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி 1979,1987, 1992 மூன்று முறை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியும் இன்னும் கிண்ணம் வெல்ல முடியாத துரதிருஷ்ட அணியாகவே உள்ளது. இம்முறை மோர்கன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து அணியில் ஜேசன் ரோய், ஜோஸ் பட்லர், ஜோனி பெயர்ஸ்டோ. மொயின் அலி என அதிரடித் துடுப்பாட்ட வீரர்களுடன் களமிறங்குவதாலும் சொந்த மண்ணில் தொடர் நடைபெறுவதாலும் இம்முறை கிண்ணம் வெல்லக்கூடிய முதல் அணியாக அவ்வணி கருதப்படுகிறது.

இவ்வருட ஆரம்பத்தில் சற்றுப் பின்னடைவைக் கண்டிருந்த ஆஸி அணி மீண்டெழுந்து ஒரு பலம் வாய்ந்த அணியை இவ்வுலகக் கிண்ணத்துக்கு தயார் நிலையில் வைத்துள்ளது. கிளேன் மெக்ஸ்வல், ஆரோன் பின்ஞ், உஸ்மான் கவாஜா இவர்களுடன் ஒரு வருட தடையின் பின் டேவிட் வோனரும், ஸ்டீவ் ஸ்மித்தும் மீண்டும் அணியில் இணைந்துள்ளதால் சிறந்த துடுப்பாட்ட வரிசையுடன் களமிறங்குகின்றது. காயத்திலிருந்து பூரண குணமடைந்துள்ள அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்ராக், பெட்கமின்ஸ் ஆகியோரின் பந்து வீச்சும் கைகொடுத்தால் 5 முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள ஆஸி அணி இம்முறையும் கிண்ணம் வெல்லும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே இரு முறை கிண்ணம் வென்றுள்ள இந்திய அணியும் அனுபவ வீரர்களுடன் கோலியின் தலைமயில் களமிறங்குகின்றது. தவான், ரோஹித், கோலி, டோனி, பாண்டியா என அதிரடி ஆட்டக்கரார்களுடன் பும்ரா, மொஹம்மட் சமி, குல்தீப் யாதவ் போன்ற பந்து வீச்சாளர்களுடன் சமபலத்துடன் களமிறங்கும் இந்திய அணி மூன்றாவது முறையாகவும் கிண்ணம் வெல்லும் எண்ணத்துடன் குதித்துள்ளது.

1975, 1975ம் ஆண்டுகளில் கிண்ணம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி 1983ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்று. அதன் பின் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களில் பிரகாசிக்கத் தவறியது மேற்கிந்திய அணி. ஆனால் அண்மையில் அதிரடியில் கலக்கி வரும் கிறிஸ் கெயில், அன்ரூ ரஸல், லுவிஸ் ஹெட்மயர், நிக்கலஸ் பூரான் என அனுபவ, இளம் வீரர்களை உள்ளடக்கிய சிறந்த அணியாகக் களமிறங்குகிறது. சகலதுறை வீரர் ஜேஸன் ஹோல்டரின் தலைமையிலான இவ்வணி ஏனைய அணிகளுக்கு நெருக்குதலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணத் தொடரில் ராசியில்லாத மற்றொரு அணி தென்னாபிரிக்க அணியாகும் அது பங்குபற்றிய முதல் தொடரிலேயே அரை இறுதி வரை முன்னேறியது.

தொடர்ந்து 4 முறை அரை இறுதிவரை முன்னேறியுள்ள அவ்வணி இம்முறை பெப்டு பிளஸியின் தலைமையில் குயிண்டன் டி கொக், ஹசிம் அம்லா, டேவிட் மில்லர் ஆகியோரின் துடுப்பாட்டத்தையும், காகிஸோ ரபாடா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் பந்து வீச்சையும் பெரிதும் நம்பி களமிறங்குகின்றது.

இதுவரை ஒரு முறை இறுதிப் போட்டிக்கும், 6 முறை அரையிறுத்திப் போட்டிக்கும் தெரிவாகியுள்ள நியூசிலாந்து அணி தலைவர் வில்லியம்சன், மார்டின் குப்டில், ரோஸ் டெய்லர் போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர்களுடனும் பெர்குசன், டிம் சௌதி, பௌல்ட் வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது.

இதுவரை உலகக் கிண்ணம் வென்றதில்லை என்ற ஆதங்கத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து அணி இம்முறை சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடனுள்ளது. எப்போதுமே கணிக்க முடியாத அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது. ஒரு முறை கிண்ணம் வென்ற அவ்வணி இம்முறையும் திடீர் திடீர் என தொடரில் திருப்பங்களை ஏற்படுத்தி கிண்ணம் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கை அணி கடந்த இரு வருடங்களாக வீரர்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை மற்றும் தலைவர் தேர்வில் ஏற்பட்ட இழுபறி, நிர்வாகக் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஒருநாள் போட்டியில் பின்னடைவை சந்தித்த நிலையிலே இத் தொடரில் மோதவுள்ளது.

இலங்கை அணி கடந்த காலங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஐ. சி. சியினால் நடத்தப்படும் போட்டித் தொடர் என்று வரும் போது சிறப்பாக விளையாடிய வரலாறுகள் அவ்வணிக்கு உண்டு. டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவின் தலைமையில் களமிறங்கும் இலங்கை அணி அனுபவ வீரர் லசித் மலிங்கவின் பந்து வீச்சை பெரிதும் நம்பியிருக்கும் அவ்வணி ஏற்கனவே 1996ம் ஆண்டு கிண்ணம் வென்ற அணியாகும்.

கடந்த வருடம் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தெரிவுப் போட்டிகளில் பலம்வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகளையே வெற்றிபெற்று இவ்வுலகக் கிண்ணத்துக்குத் தெரிவானது.

வளர்ந்து வரும் அவ்வணியில் திறமைவாய்ந்த பல இளம் வீரர்கள் உள்ளதால் ஏனைய அணிகளுக்கு சவாலாக அவ்வணி திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை