இலங்கை கிரிக்கெட் அணிக்கு அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவின் மூன்று பொலிஸார் கடமையில்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்கள் என்பவற்றை இலக்குவைத்து தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவங்களின் பின்னர் கடந்த புதன்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் , சர்வதேச கிரிக்கெட் சபையுடன் இலங்கையின் விளையாட்டு அமைச்சுடனும் இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பை எதிர்வரும் உலகக் கிண்ணத்தில் உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை இலங்கை அணியுடன் இங்கிலாந்து அனுப்புவதற்கான முறையான சம்பவத்தினை இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பதில் பொலிஸ்மா அதிபர் மூலம் பெற்றுள்ளார்.

”இலங்கை கிரிக்கெட் மேலதிக பாதுகாப்புக்கான வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தது, இதனால் நாம் அவர்களின் (அமைச்சர் பாதுகாப்பு பிரிவின்) சிறந்த மூன்று உத்தியோகத்தர்களை (இலங்கை) அணியுடன் அனுப்புவதற்கு தேவையான அத்தியாவசிய ஒப்புதல்களை அமைச்சர் பாதுகாப்பு பிரிவிடம் இருந்து பெற்றுக் கொண்டோம். அவர்கள் உலகக் கிண்ணத்தின் போது ஐ.சி.சி. உடன் இணைந்துள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து நெருக்கமாக வேலை செய்வார்கள்.

இப்போது நாம் அபாயம் ஒன்றினை எதிர்நோக்கும் நிலையில் இல்லை.” என விளையாட்டுத்துறை அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் வெளிநாட்டு கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் போது தங்களுக்கென பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வைத்திருக்கின்றன. எனினும், இலங்கை வெளிநாட்டு கிரிக்கெட் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் போது சுற்றுப் பயணம் செல்கின்ற அந்நாட்டின் பாதுகாப்புத்துறையினையே நம்பிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை மையமாக வைத்து இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களினால், இலங்கை கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீரர்கள் குழாத்திற்கு மாதுரு ஓயா மற்றும் தம்புள்ளை ஆகிய இடங்களில் கடந்த வாரம் வழங்கவிருந்த விசேட பயிற்சிகளையும் இரத்துச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியினர் இந்த வாரம் இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் விஷேட பாதுகாப்போடு கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இரண்டு தடவைகள் பயிற்சிகளை பெற்றுக் கொண்டிருந்தனர்.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி வீரர்கள், அதன் உத்தியோகத்தர்கள் என்பன அடங்கிய 30 பேர் கொண்ட குழு எதிர்வரும் 07ஆம் திகதி இங்கிலாந்து நோக்கி பயணமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி இங்கிலாந்து பயணமாகிய பின்னர் ஸ்கொட்லாந்து அணியுடன் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதோடு, உலகக் கிண்ணத் தொடரை ஜூன் மாதம் 01ஆம் திகதி நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பம் செய்கின்றது.

Sat, 05/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை