சமூக வலைத்தளங்கள் மூலமே சர்வதேச பயங்கரவாதம் புத்துயிர் பெறுகிறது

பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் பூண்டோடு அழிக்க புதிய சட்டங்களை உருவாக்குவதையே பாராளுமன்றத்தின் ஊடாக நாம் செய்ய வேண்டிய முதல் பணியாகவுள்ளதென மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தங்கள் ஊடாகவே சர்வதேசப் பயங்கரவாதம் புத்துயிர் பெற்றுவருவதாக தெரிவித்த அவர், அரபு மொழியையும், அரபு கலாசாரங்களையும் இங்கு கொண்டுவர சில முஸ்லிம் தரப்பினர் கடந்த இரண்டு தசாப்தகாலமாக முற்பட்டுவருவதாகவும் கூறினார்.

அம்பாந்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பயங்கரவாதத்தை ஒழிப்பதென்பது பாதுகாப்புத்துறையினரால் மாத்திரம் தீர்வுகாணும் விடயமல்ல. இதில் சட்ட ரீதியான, சமூக ரீதியான, அரசியல் ரீதியான பக்கங்கள் உள்ளன. சர்வதேசப் பயங்கரவாதம் உயிர்பெறுவது சமூக வலைத்தளங்களிலாகும். முகநூல் அல்லது ஏனைய சமூக வலைத்தளங்களில் உள்ள உபாயமார்கங்களின் ஊடாகத்தான் சர்வதேச பயங்கரவாதம் தலைத்தூக்கி வருகிறது.

ஆகவே, எமக்கு புதிய சட்டங்கள் அவசியம். சர்வதேச பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் ஒழிக்கும் புதிய சட்டங்களை உருவாக்குவதுதான் பாராளுமன்றத்தின் ஊடாக நாம் செய்ய வேண்டிய முதல் பணியாகவுள்ளது. கட்சி பேதங்கள் கடந்து நாம் அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

அதேபோன்று எமது நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கும் பாரிய பொறுப்பொன்றுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை பேணுவதற்கு பதிலாக அரபு கலாசாரத்தையும், அரபு தனித்துவத்தையுமே இந்நாட்டில் உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். சிங்களம், தமிழ் மொழியை கற்றுக்கொள்வதற்கு பதிலாக அரபு மொழியை கற்றுக்கொள்கின்றனர். அதேபோன்று அராபிய உடைகளையும், கலாசார நிகழ்வுகளையும் இங்கு கொண்டுவருகின்றனர் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 05/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை