“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை”

ஊடகங்களில் வெளியான செய்தியை ஜனாதிபதி மறுப்பு

ஏப்ரல் 8 ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தனக்கு தெரியப்படுத்தவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒரு சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த ஊடக அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்துவிசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இலங்கை பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போது தேசிய புலனாய்வுதுறைத் தலைவர் தெரிவித்த விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன.

அந்த ஊடக அறிக்கைகளில் 2019 பெப்ரவரி மாதத்தின் பின்னர் தேசிய பாதுகாப்புச் சபை கூடவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தேசிய பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் ஊடகங்களில் வெளிவந்த காரணத்தினால், தேசிய பாதுகாப்புச் சபையை விட வேறுபட்ட கட்டமைப்பினை கொண்ட தேசிய பாதுகாப்பு குழுவினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பாதுகாப்புக் குழு கடந்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக கூடியதுடன், சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியினால் வாரத்திற்கொருமுறையும் கூட்டங்களை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும் 2019 ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் மாதாந்த கூட்டமும் ஜனாதிபதியினால் கூட்டப்பட்டது.   இரண்டு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற அக்கலந்துரையாடலின்போதும் இத்தகையதொரு பயங்கரவாத திட்டம் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக எந்தவொரு அதிகாரியும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கவில்லை.

மேலும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் இடம்பெறக்கூடுமென சர்வதேச நட்பு நாடொன்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற எந்த தகவல் பற்றியும் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் அல்லது வேறு எந்தவொரு அதிகாரியினாலும் ஜனாதிபதிக்கு  அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே இத்தாக்குதல் பற்றி ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாக வெளிவந்திருக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Thu, 05/30/2019 - 16:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை