எனது உத்தரவுக்கமையவே இராணுவ வீரர்கள் களத்தில் செயற்பாடு

வெற்றியோ, தோல்வியோ அனைத்துக்கும் நானே பொறுப்பு

இராணுவ வீரர்கள் தமக்கு வழங்கப்படும் உத்தரவுகளை செயற்படுத்தும் போது அதற்கு இராணுவ தளபதியே பொறுப்பாக இருப்பாரென்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக, தினகரனுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, சேவையில் உள்ள அனைத்து இராணுவ வீரர்களும் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் இராணுவத் தளபதியின் பிரத்தியேக அங்கீகாரம் உள்ளது.

இராணுவ வீரரொருவர் ஒருவரை கைது செய்தால், அது எனது எழுத்து மூல உத்தரவின் கீழேயே இடம்பெறும். அவ்வாறான ஒரு உத்தரவை எனக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தலைவர் (சிடிஎஸ்) வழங்கும் எழுத்து மூல உத்தரவைப் பின்பற்றியே இருக்கும். முன்னர் அது போல் இருக்கவில்லை. ஏதாவது சம்பவம் இடம்பெற்றால் அதற்கு சம்பந்தப்பட்ட இராணுவ வீரரே பொறுப்பாக கருதப்பட்டார். இன்று அதுபற்றி அந்த இராணுவ வீரரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர்களுக்கு பொறுப்பை

ஒரு தளபதி ஏற்றுக் கொள்வார். ஏதாவது பிழையாக நடந்தால் நான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வேன்” என்று இராணுவ தளபதி கூறினார்.

எவ்வாறெனினும் முன்னர் ஏற்பட்ட தவறுகளுக்கு பொறுப்பேற்க மாட்டேன்.

ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் அதாவது எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு பின்னர் இடம்பெறும் சம்பவங்கள் பற்றித்தான் நான் பேசுகிறேன். எனவே எனது உத்தரவின் கீழ் செயற்படுத்தப்படும் நடவடிக்ககைகளுக்கு நானே பொறுப்பு. அந்த நடவடிக்கை வெற்றி பெறுவதாக இருக்கட்டும் அல்லது தோல்வியடைவதாக இருக்கட்டும்,அதற்கு நான் பொறுப்பேற்பேன். இயல்பு நிலையை நாம் விரைவில் எட்ட முடியும் என்று நம்புகிறேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களால் நாடு பின்னோக்கிச் சென்றுள்ளது என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

தாக்குதலுக்கு பொறுப்பான பயங்கரவாதக் குழு கடந்த ஒக்டோபருக்கு முன்னரே செயற்படத் தொடங்கியுள்ளது. அது பல வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளது.

அப்படியானால் அப்போது, சட்டம் மற்றும் ஒழுங்கை கையாண்டவர் யார்? இப்போது அந்த பதவியை வகிப்பவர் அப்போது அந்தப் பதவியில் இருக்கவில்லை.

அப்படியானால் அவர்கள் ஏன் நாங்கள் சொன்னதை கேட்கவில்லை. புலனாய்வு துறையினரை ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 20 நாட்களில் நாம் சிறப்பாக செயற்படுவதற்கு எமது கடப்பாடு மேம்படுத்தப்பட்டதே காரணமாகும்.

மற்றவர்கள் மீது பழிபோடுவதை நாம் விரும்பவில்லை. ஆனால் இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படும் போது, புலனாய்வு பணிப்பாளர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டபோது, பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தலைவர் கைது செய்யப்பட்டபோது, அவ்வாறான சந்தர்ப்பங்களில் இராணுவத்தினுள் ஓரளவு குழப்ப நிலை நீடித்தது.

அதாவது புலனாய்வுத் துறை முற்றிலும் செயலிழந்தது என்று கூறவில்லை ஆனால் அது ஓரளவு பாதிக்கப்பட்டது என்று கூறலாம் என்று அவர் கூறினார்.

லெப். ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை