இராணுவத்தை பயன்படுத்தி மோதலை தவிர்க்க முடியாது

இனங்களுக்கிடையிலான ஒற்றுமையே தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும்

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையே தேசிய பாதுகாப்பாகும். இனங்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை பயன்படுத்தியோ அல்லது புதிய தொழில்நுட்பங்கள் மூலமோ மோதல்களை ஒருபோதும் தடுக்க முடியாது.

முஸ்லிம் அடிப்படைவாதத்தை அழிக்கும் பாரிய பொறுப்பும் கடமையும் முஸ்லிம் மதத் தலைவர்களுக்கும், முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்குமே உள்ளது. தீவிரவாதத்தை பாதுகாத்து அதனை வளர்ச்சியடையச் செய்வதா? இல்லையா? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பிக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையிலான விசேட

சந்திப்பொன்று நேற்று ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவர் மேற்கண்டவாறு கூறினார். இச்சந்திப்பில் ஜம்மஇய்யதுல் உலமா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், அகில இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் பேரவை, ஸ்ரீலங்கா ஜமாதே முஸ்லிம் சங்கம், முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல அமைப்புகள் கலந்துகொண்டிருந்தன.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களை இரண்டு தரப்புகள் இணைந்து நடத்தியுள்ளன. ஒன்று தற்கொலைதாரிகளும், தாக்குதல்களை நடத்த உடந்தையாக இருந்தவர்களுமாகும். இரண்டவாது, தாக்குதல்கள் குறித்து போதியளவு முன்னெச்சரிக்கைகளும், புலனாய்வுத் தகவல்களும் இருந்தும் தாக்குதலை தடுப்பதில் அரசாங்கம் அசமந்தப் போக்கில் செயற்பட்டுள்ளது. ஆகவே, இரண்டாவது தரப்பு அரசாங்கமாகும்.

பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் சம்பங்களுக்கு காரணமானவர்களை கைது செய்யவும், தாக்குதல்களை நடத்த பயன்படுத்தப்பட்ட பொருட்களை கைப்பற்றவும், இடங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுமே முடியும். மத அடிப்படைவாதச் சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தான் எழுச்சியடைகிறது. ஆயுதங்களைவிட இது பிரபல்யமானது. இந்த மதவாதம், மத அடிப்படைவாத போதனைகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் பாரிய குரலை கொடுக்க வேண்டியுள்ளது. ஆகவே, தீவிரவாதத்தை பாதுகாத்து வளர்ச்சியடைய செய்வதா? அல்லது அதனை அழிக்க வேண்டுமா? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம் சிவில் அமைப்புகள், மதத் தலைவர்களுக்கு பாரிய பொறுப்பொன்று உள்ளது.

அடிப்படைவாதமும் தீவிரவாதமும் எழுச்சிப்பெறுவதை தடுக்கும் பாரிய பொறுப்பு இவர்களுக்கு உள்ளது. இல்லாவிட்டால் மீண்டும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற சந்தர்ப்பங்கள் உள்ளன. அடிப்படைவாதத்தின் இயற்கைத் தன்மை தான் ஒரு அடிப்படைவாதத்திலிந்து மற்றுமொரு அடிப்படைவாதத்தை தோற்றுவிப்பது.

அது இனவாத அடிப்படையாக இருக்கலாம் அல்லது மதவாத அடிப்படையாக இருக்கலாம். மத அடிப்படைவாதமும், இனவாதமும் இரண்டும் ஒன்றுக்கொண்டு சேவை செய்துக்கொள்பவையாக வளர்ச்சியடையும்.

ஆகவே, இன, மத அடிப்படைவாதங்கள் வளர்ச்சியடைவதற்கான பாதையை அழிப்பதன் மூலம் அதனைத் தோற்கடிக்க முடியும். சில சந்தர்ப்பங்களில் அடிப்படைவாதத்தை தோற்கடிக்க எடுக்கும் முயற்சிகளால் அது வளர்ச்சியடையும் என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.

அரசியல் நிகழ்ச்சி நிரலில் மத அடிப்படைவாதத்தை ஒரு பகுதியாக நாம் இணைத்துக் கொள்ளக்கூடாது. அரசியல் செய்ய எவ்வளவோ விடயங்கள் உள்ளன. சமூகத்தைச் சிந்தித்து அரசியல் செய்ய வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. சமூகங்களுக்கு இடையில் குழப்பத்தைத் தோற்றுவித்து குளிர்காயக் கூடாது. ஒருவருக்கு ஒருவர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அச்சுறுத்தல் மிக்க சூழலில் இருந்து சமூகத்தை பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும்.

அரசின் பிரதான கடமை எமது நாட்டில் தேசிய இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையும் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும்.

இங்கு உரையாற்றிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்,

இது எல்லை இல்லாத போராட்டம். மிகவும் ஆபத்தானது. அனைவரும் நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் செயற்பட்டால் மாத்திரமே இதற்குத் தீர்வைக்காண முடியும்.

கடந்த காலத்தில் ஒருதரப்பு பெரும்பான்மையான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டுள்ளோம். அது பிழையானதாகும்.

சிங்கள மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் ஒரு நாளைக்கு ஒரு தாக்குதல் என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.

பள்ளிகளுக்குத் தீ வைக்கின்றனர். கடைகளை உடைக்கின்றனர். இவை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு முஸ்லிம்கள் மிகவும் பொறுமையுடன் இருந்தனர். ஏனென்றால், இஸ்லாமிய மதத்தில் ஒருவர் எம்மைத் தாக்கினால் அவரைத் திருப்பித் தாக்க வேண்டுமென எங்கும் கற்பிக்கப்படவில்லை.

இந்நிலைக்குப் போவதற்கு இடமளிக்க வேண்டாமென பலமுறை நாங்கள் தெரியப்படுத்தியிருந்தோம். தாக்குதல்களுக்கு உள்ளானால் எவரும் மிருகங்கள் போன்றே செயற்படுவார்கள். அளுத்கம பிரச்சினைக்குப் பின்னரும் இந்நிலைக்குத் தள்ள வேண்டாமென நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். சிலர் எம்மை ஆண்கள் இல்லையென்று விமர்சனம் செய்திருந்தனர். எவ்வளவு தாக்குதல் நடத்தினாலும் பொறுத்துக்கொண்டு இருப்பார்கள் எனக் கூறியிருந்தனர். ஆகவே, சிங்கள மக்களும் இதற்கு ஓரளவு பொறுப்பானர்கள்.

நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது முஸ்லிம் மக்களுக்காக செய்யும் போராட்டம் அல்ல. எல்லை இல்லாத குழுவுடன் இணைந்து நடத்தும் போராட்டம். அனைவரும் ஒன்றிணைந்துதான் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை