இலங்கையின் தனித்துவத்தை அடிப்படைவாதத்தால் அழித்துவிடாது பாதுகாக்க வேண்டும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கட்சிகளுடன் கலந்துரையாடல்

நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்குள்ளும் இலங்கை என்ற தனித்துவம் உள்ளடங்கியுள்ளது. இந்த தனித்துவத்தை அடிப்படைவாதத்தால் அழித்துவிடாது பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடப்படும் என்பதுடன், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது சரத்துகள் மிகவும் முக்கியமானவை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமான்ய நிக்காய மகாநாயக்க தேரர்களை சந்தித்து நேற்று ஆசிப்பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து நாட்டைப் பாதுகாத்துக்கொள்ள மகாநாயக்க தேரர்களை முன்வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அத்தருணத்தில் மகாநாயகர் தேரர்கள் எடுத்திருந்த தீர்மானத்தால் எமது நாட்டின் கிராமங்களிலும் சமாதானம் பாதுகாக்கப்பட்டது. மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் பாதுகாத்திருந்தனர். அதனால் இன்று மூன்று மகாநாயக்க தேரர்களிடமும் ஆசியை பெற்றுக்கொண்டேன்.

அதேபோன்று நாட்டின் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்த ஏனைய மகாநாயக்க தேரர்களுக்கும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். நாட்டை சாதாரண நிலைக்கு கொண்டுசெல்வது தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் பேச்சுகள் நடத்தினேன். அதேபோன்று தேசியப் பாதுகாப்புக்காக இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளித்தேன்.

எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலையொன்று ஏற்படாத வண்ணமும் நாம் செயற்பட வேண்டும். பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் இத்துடன் நிறுத்திக்கொள்வார்களென எம்மால் எதிர்வுக்கூற முடியாது. ஆகவே, அது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்பதுடன், பயங்கரவாதிகளையும், தீவிரவாதிகளையும் ஒழிப்பது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.

முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அதேபோன்று இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளேன்.

இலங்கை என்பது பௌத்த மதத்தால் மாத்திரமல்ல. இந்த நாட்டில் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட மதங்கள் உள்ளதுடன், இலங்கையர்கள் என்ற தனித்துவமும் உள்ளது. இத்தனித்துவத்தை அடிப்படைவாதிகளுக்கு அடிபணிய இடமளிக்கக் கூடாது. அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும். வெசாக் நிகழ்வை கொண்டாடுவது குறித்தும் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடினேன். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர்கள் கூறினர். கொள்கை வழிப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிகழ்வுகளை விகாரைகளுக்கான நிலப்பரப்புக்குள் வரையறுத்துக்கொள்வது மிகவும் நன்மையானது. அனைத்துப் பிரதேசங்களினதும் பாதுகாப்பு நிலைமைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இதேவேளை, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடப்படும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது சரத்துகள் மிகவும் முக்கியமானது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை