இந்திய தேர்தல் முடிவுகள் இன்று

பா.ஜ.கவுக்ேக பெரும்பான்மை கிடைக்குமென கருத்துக்கணிப்பு

இந்தியாவின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. 543 தொகுதிகளைக் கொண்ட இந்தியாவில் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் இம்மாதம் 18ஆம் திகதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற இத் தேர்தலில் ஏப்ரல் 11 ஆம் திகதி 20 மாநிலங்களைக் கொண்ட 91 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 ஆம் திகதி 13 மாநிலங்களைக் கொண்ட 97 தொகுதிகளுக்கும்

ஏப்ரல் 23 ஆம் திகதி 14 மாநிலங்களைக் கொண்ட 115 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 29 ஆம் திகதி 9 மாநிலங்களைக் கொண்ட 71 தொகுதிகளுக்கும் மே 6 ஆம் திகதி 7 மாநிலங்களைக் கொண்ட 9 தொகுதிகளுக்கும் மே 12 ஆம் திகதி 7 மாநிலங்களைக் கொண்ட 59 தொகுதிகளுக்கும் மே 19 ஆம் திகதி 8 மாநிலங்களைக் கொண்ட 59 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. முதலில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். தபால் மூல வாக்குகள் எண்ணி முடிந்ததும் 30 நிமிடங்களுக்குப் பின் ஏனைய வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

காலை 8:30 மணிக்கு மேல் கட்சிகளின் முன்னணி நிலவரம் தெரிய வரும். பகல் 12:00 மணியளவில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும்; யார் பிரதமர் என்பதும் தெளிவாகி விடும். முழு முடிவுகள் வெளியாக இரவாகி விடும். இதேவேளை தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகளும் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக சுமார் 30 இலட்சத்து 96 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும சுமார் 10 இலட்சத்து 74 ஆயிரம் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. 91 கோடி வாக்காளர்களில் 67.11 சதவீதம் பேர் வாக்களித்தனர். இந்திய தேர்தல் வரலாற்றில் இந்தத் தடவைதான் அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது 65.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்தத் தடவை 1.16 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.

வாக்களிப்புக்கு பின் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகள் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த 19ம் திகதி மாலை வெளியாகின. பெரும்பாலான கருத்து கணிப்புகள் பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றே கூறியுள்ளன. இது பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் மோடி பிரதமராவார் என அக்கட்சித் தலைவர்கள் நம்பிக்கையுடன் வலம் வரத் துவங்கியுள்ளனர். அதேநேரத்தில் கருத்துகணிப்பு முடிவுகளை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ஏற்க வில்லை.

பா.ஜ.க - காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி ஏற்படும். அந்த நேரத்தில் பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாயாவதி, மம்தா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட சில மாநில கட்சித் தலைவர்களும் காத்திருக்கின்றனர். யார் ஆசை நிறைவேற போகின்றது என்பது இன்று நண்பகல் 12 மணியாகும்போது தெரிந்துவிடும்.

 

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை