உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் விசாரணைகளில் முன்னேற்றம்

குறுகிய காலத்தினுள் பிரதிபலன்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்தில் இத்தகைய விசாரணைகள் மூலம் அதிக பிரதிபலனை பெற்றுக்

கொண்டுள்ளமை வெளிநாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகவும் அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் தெரிவித்தார்.

அல்பிரட் துரையப்பா படுகொலை சம்பவத்தின் சாட்சியங்களை 20 வருடத்துக்குப் பின்னரே பெற்றுக் கொள்ள முடிந்தது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு மாதம் கூட கடக்காத நிலையில் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். நாடடில் மோசமான சூழ்நிலையை உருவாக்கி இத்தகைய விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்த முடியும்.

ஆதலால் பொறுமையுடன் செயற்பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்குமாறு தாம் மக்களைக் கேட்டுள்ளதாகவும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: கடந்த ஞாயிறு நாட்டின் பல பிரதேசங்களிலும் வன்முறைச் சம்பங்கள் இடம்பெற்ற போதும் திங்கட்கிழமைக்குள் அதனைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சுமுக நிலையை ஏற்படுத்த முடிந்துள்ளது.

நாட்டில் அமைதியைப் பாதுகாப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் முழுமையான அதிகாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக அவர்கள் அர்ப்பணி்புடன் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைகளை தாமதப்படுத்தவே வழிவகுக்கும். விசாரணை நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் குற்றத்தடுப்புத் திணைக்களம், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் பெருமளவு தகவல்களைப் பெற்றுக்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனூடாக தாக்குதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அந்த எண்ணிக்கையை வெளியிடமுடியாது.

இன்னும் சில தினங்களில் மேற்படி தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்ய முடியும். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தற்போது நிலவும் கூற்றுக்கள், அறிக்கைகள் உண்மையானதா என நான் பொலிஸாரிடம் கேட்டேன். வதந்திகள் பரப்பப்படுவதால் அவை அனைத்தும் உண்மையெனக் கூறமுடியாதென அவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகங்கள் தமது வர்த்தக நோக்கத்துக்காக எததகைய தகவல்களை வெளியிட்டாலும் பொலிஸ் தரப்பிற்கூடாகவே உண்மையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை