தேவாலயங்களை புனரமைக்க வீடமைப்பு அமைச்சு நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சேதமடைந்த மூன்று தேவாலயங்களையும் படையினரின் உதவியுடன் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சு எடுத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் பேர்னாட் வசந்த தெரிவித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றில் உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி  குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.

குண்டு வெடிப்பில் சேதமடைந்த கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை புனரமைத்தல் மற்றும் திருத்த வேலைகள் கடற்படையினரின் உதவியுடன் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய பகுதியிலுள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தின் புனரமைப்பு  மற்றும் திருத்த வேலைகள்,  இராணுவத்தினர் மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும்.

மட்டக்களப்பிலுள்ள சீயோன் தேவாலயத்தின் புனரமைப்பு மற்றுத் திருத்த வேலைகள், இராணுவத்தினர் மற்றும் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு, குறித்த மூன்று தேவாலயங்களினதும் புனமைப்பு மற்றும் திருத்த வேலைகள் கொழும்பு உயர் மறைமாவட்ட  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஏனைய மதகுருமார்களின் வழிகாட்டல்களுக்கமைய முன்னெடுக்கப்படும், எனவும் அவர் கூறினார்.

Sat, 05/04/2019 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை