சில அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளின் நோக்கத்திற்கேற்ப செயற்படுகின்றனர்

எதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளின் நோக்கத்திற்கேற்பவே செயற்படுவதாகவும் நாட்டு மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பிரதேசங்களில் நிலவும் மோசமான மோதல் சம்பவங்களை அரசியலாக்கிக்கொண்டு சுயநலத்துடன் அதனை தமது அரசியல் நோக்கங்களுக்கு அவர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டை மேலும் மோசமாக வீழ்ச்சியுறச் செய்வதற்கும் அவர்கள் செயற்படுவதுடன் அவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் இனவாதத்தையும் மத வாதத்தையும் அடிப்படை வாதத்தையும் தூண்டி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் தமது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்கள் தொடர்பில் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர் மோசமான கூற்றுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் இத்தகைய நிலைமையை மோசமடையச் செய்து அதனை அரசியலாக்கவே முயற்சிக்கின்றனர். இதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படுமென்பதை அறிவுபூர்வமான மக்கள் புரிந்துகொள்வர்.

ஐக்கிய தேசியக் கட்சியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத, மதவாத நோக்கத்தோடு செயற்பட்டது கிடையாது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் அதை உறுதியாக குறிப்பிட விரும்புகிறேன். அதேவேளை இச்சந்தர்ப்பத்தில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும். இனவாதம், மதவாதத்தை பலப்படுத்துவதன் மூலம் அரசியல் நோக்கத்தை அடையமுடியாது என்பதே எமது நம்பிக்கை. அதுவே எமது கட்சியின் கொள்கையுமாகும்.

மே 13ம் திகதி நாட்டில் சில பகுதிகளில் பாரிய குண்டுவெடிப்புகள் இடம்பெறுமென வதந்திகள் பரப்பப்பட்டன. இதன்மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, பாடசாலை மாணவர்களின் கல்வியை சீரழித்து நாட்டை மோசமான நிலைக்கு தள்ளிவிடவே சிலர் முயற்சித்தனர். அத்தகைய சந்தர்ப்பவாதிகளின் நோக்கம் பிசுபிசுத்துவிட்டது. அதனையடுத்து தமது நோக்கம் நிறைவேறாத நிலையில் சாதாரண மக்களுக்கிடையே குழப்பகரமான நிலைமையை ஏற்படுத்துவதற்கு பேதங்களை உருவாக்கி எதிர்க்கட்சியினர் சிலர் செயற்பட்டு வருகின்றனர். எம்மீது தேவையற்ற குற்றங்களை சுமத்தி அவர்கள் பயங்கரவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுப்பதிலேயே அவதானத்துடன் செயற்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Wed, 05/15/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக