சீனத் தலைநகரில் ஒருவார காலம் ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல்

ஜனாதிபதி மைத்திரி இன்று முக்கிய உரை

பெய்ஜிங்கில் இன்று புதன்கிழமை முதல் அடுத்த புதன்கிழமை வரை 'ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல்' நடைபெறவிருக்கிறது. சீன அரசாங்கத்தினால் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முன்னோடியினதும் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்பதுமான இந்த நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பல நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

ஒரு வார காலத்துக்கு நீடிக்கும் நிகழ்வில் இலங்கை, கம்போடியா, கிரேக்கம், சிங்கப்பூர், ஆர்மேனியா மற்றும் மொங்கோலியா ஆகிய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களும் யுனெஸ்கோ மற்றும் சர்வதேச அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள் என்று கடந்த வாரம் சீன அரசாங்க சபையின் தகவல் அலுவலக அமைச்சரான ஸூ லின் அறிவித்தார். இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவிருப்பதுடன், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தவிருக்கிறார். நாளை வியாழக்கிழமை அவர் நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மண்டலமும் பாதையும் செயற்திட்ட மகாநாடும் 2019 சர்வதேச தோட்டக்கலை கண்காட்சியும் அண்மையில் நடைபெற்று முடிந்த கையோடு ஆசிய கலாசாரங்களின் கலந்துரையாடல் நடைபெறுகிறது.'ஆசிய நாகரிகங்கள் மத்தியில் பரிமாற்றங்களும் கற்றறிதலும் பொதுவான எதிர்காலத்துடனான ஒரு சமூகமும்' என்பதே இந்தக் கலந்துரையாடலின் தொனிப்பொருளாகும்.

47 ஆசிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், கலாசாரம், கல்வித்துறை, சினிமா, தொலைக்காட்சி, ஊடகத்துறை, சிந்தனைக் குழாம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் பிரபல்யம் பெற்றவர்களும் உட்பட 2000 க்கும் அதிகமான முக்கியஸ்தர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

ஆசிய நாகரிக அணிவகுப்பு, உணவுத் திருவிழா, ஆசிய கலாசாரத் திருவிழா, ஆசிய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை கண்காட்சி, ஆசிய திரைப்பட வாரம் மற்றும் ஆசிய நாகரிகங்களின் கூட்டு கண்காட்சி ஆகியவை உட்பட கலாசாரத்துடனும் சுற்றுலாத்துறையுடனும் தொடர்புடைய பெருவாரியான நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.

இந்தியாவின் புராதன கலையான யோகா மீது சீனாவில் ஆர்வம் காட்டுப் போக்கு பெருமளவில் அதிகரித்து வருவதை மனதிற் கொண்டு அந்தக் கலைக்கு பெருமைக்குரிய இடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுனானின் தலைநகர் குன்மிங்கில் அமைந்திருக்கும் யுனான் மின்சு பல்கலைக்கழகத்தில் முதன்முதலான சீன -- இந்திய யோகா கல்லூரி நிறுவப்பட்டது. யோகா பிரபல்யம் அடையத் தொடங்கியதை அடுத்து 2017 ஆம் ஆண்டில் சீன -- இந்திய யோகா கல்லூரி முதுமாணி கற்கைநெறிகளுக்கு மாணவர்களைச் சேர்க்க ஆரம்பித்தது.

பிரபல்யமான இந்திய யோகா குரு யதீந்திர தத் அமோலியின் பணிகளை சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் எழுத்தாளர்களான பென் பீயெனும் ஷூ யியும் ஸுவான் லீகியும் சிறப்பாக வர்ணித்திருக்கிறார்கள். அமோலி சீனர்களுக்கு யோகாவைக் கற்றுக் கொடுக்கின்ற அதேவேளை, சீன வீர விளையாட்டான தஜியை கற்று வருகின்றார்.

" யோகா பயிற்சி தொடர்பில் சீன மாணவர்களுக்கு அமோலி விளக்கங்களை அளித்து வருகின்றார்.ஆனால், அந்த வகுப்புகளுக்குப் பிறகு அவர் ஒரு மாணவராக மாறி விடுகிறார்.சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு கலாசாரப் பரிமாற்றத் திட்டத்தின் யோகா ஆசிரியரான அமோலி சீனாவின் ஒரு புராதன வீர விளையாட்டான தஜியைக் கற்றுக் கொள்வதில் பேரார்வம் காட்டுகிறார்.தனது சீன மாணவர்களிடமும் நண்பர்களிடமும் தஜி பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதில் அடிக்கடி நாட்டம் காட்டுகிறார்" என்று சின்ஹுவா எழுத்தாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

மே 15 தொடக்கம் -- 22 வரை பெய்ஜிங்கில் ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல் மகாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், கலாசாரங்களுக்கு இடையிலான அத்தகைய பரஸ்பர கற்றறிதல் சகஜமானதாக மாறி விடும். இந்த மகாநாடு கலாசாரப் பல்வகைமை, பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர கற்றறிதல் ஆகியவை மீதே கவனத்தைக் குவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மொத்த நிலப்பரப்பில் ஆசியா 30 சதவீதத்தைக் கொண்டுள்ளது ; உலக சனத்தொகையில் 59 சதவீதத்தினர் ஆசியாவில் வசிக்கிறார்கள். சீன, இந்திய மற்றும் மெசபத்தோனிய போன்ற உலகின் மிகவும் பழைய நாகரிகங்கள் சிலவற்றின் மையமாக ஆசியா விளங்குகிறது.

இன்று ஆசியா உலக பொருளாதார வளர்ச்சிக்கு விசையாற்றல் வழங்குகின்ற இயந்திரமாக வெளிக்கிளம்பியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் விபரங்களின்படி 2018 ஆம் ஆண்டில் உலகின் நிகர உள்நாட்டு உற்பத்தியின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஆசிய பங்களிப்புச் செய்திருக்கிறது.

" ஆசிய நாகரிகங்கள் காலத்துக்குத் தாக்குப் பிடிக்கின்ற,மிகவும் நிலையுறுதியான, தாக்கவிளைவுகளைத் தாங்கவல்ல நாகரிகங்கள் என்பதை நிரூபித்திருக்கின்றன" என்று பெய்ஜிங் வெளியுறவு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியரான டேவிட் பார்ரோஷ் கூறியிருக்கிறார்.

ஆசிய நாகரிகங்களின்கலந்துரையாடல் மகாநாட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்கோர் வாற் மற்றும் தாஜ்மஹால் தொடக்கம் பாரசீக சிற்பக்கலை மற்றும் அராபிய நடனங்கள் வரை பெருவாரியான படங்களை பிரசுரித்து ஆசிய நாகரிகங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஆறு குழுக் கலந்துரையாடல்களில் நிபுணர்கள் பிராந்திய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்ற விவகாரங்கள் குறித்து ஆராயவிருக்கின்ற அதேவேளை, இளம் கலைஞர்கள், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் உணவுப்பிரியர்கள் ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல் மகாநாட்டின் பக்கநிகழ்வாக இடமபெறும் ஆசிய கலாசார களியாட்டத்தில் கலந்துகொண்டு சுவையான அனுபவங்களைப் பெறுவர். முழு வாரத்திலும் பல்வேறு ஆசிய நாடுகளையும் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் அணிவகுப்புகள் நடைபெறவிருக்கின்றன.

மகாநாட்டுத் தொண்டராகப் பணியாற்றும் ஒரு மாணவரான ஷாங் ஜலாய் சின்ஹுவா செய்தியாளர்களுடன் பேசுகையில் இந்த மகாநாட்டின் அங்கமாக இடம்பெறவிருக்கும் திரைப்படங்கள் மற்றும் உணவு வகைகளுடன் சம்பந்தப்பட்ட நிகழ்டுகளைத் தவறவிட முடியாது என்று சொன்னார்.அதேவேளை, இளந்தலைமுறையினர்க்கு இடையிலான கலந்துரையாடலுக்கான ஒரு சந்தர்ப்பமாகவும் மகாநாட்டை அவர் நோக்குகிறார்.

" எங்களைப் போன்ற இளையவர்கள் எமது வாழ்வின் முற்கட்டத்திலேயே ஏனைய கலாசாரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அவற்றில் இருந்து கற்றுக் கொள்ளவும் கூடியதாக இருக்கும்.எமது எதிர்காலத்துக்கு பயன் தரக் கூடியதான சொந்த சிந்தனையையும் வடிவமைத்துக் கொள்ளவும் முடியும்" என்று ஷாங் கூறினார். மொழியியல் மாணவர் என்ற வகையில் அவர் தனக்கிருக்கும் மொழிபெயர்ப்பு ஆற்றல் வெளிநாடுகளின் கலாசாரங்களை சுலபமாக விளங்கிக் கொள்ள உதவும் என்று நம்புகிறார்.

மகாநாட்டில் ஆறு குழுக்கள் ஆட்சிமுறை, கலாசாரப் பல்வகைமை, கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை, கலாசாரப் பேணுதலும் இளையவர்களின் கடப்பாடுகளும், ஆசிய நாகரிகங்களின் உலகளாவிய செல்வாக்கும் பரஸ்பர கற்றறிதலும் என்ற விடயதானங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தும். இவை ஆசிய நாகரிகங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வுக்கும் அறிவுப்பகிர்வுக்கும் வழிவகுக்கும் என்று மகாநாட்டில் ஒரு அதிதியாகக் கலந்து கொள்ளவிருக்கும் மியன்மாரின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான நிலையத்தின் தலைவரான கோ கோ லைங் கூறினார்.

" இது நாம் ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டிருக்கும் தப்பபிப்பிராயங்களும் எமது தவறான அறிவும் காரணமாக இன்று எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உதவும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பண்டைய காலத்தால், தூரமேற்கில் இருந்து தூரகிழக்கிற்கு பொருட்களையும் பண்டங்களையும் விநியோகித்ததன் மூலம் மாத்திரமல்ல, புதிய சிந்தனைகள், தொழில்நுட்பங்கள், கலாசாரங்கள் மற்றும் நம்பிக்கைகளை பரவச்செய்ததன் மூலமாகவும் பட்டுப்பாதை ஆசிய நாகரிகங்களுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.

இப்போது ஆசிய நாகரிகங்களின் மகாநாட்டில் இடம்பெறவிருக்கும் கலந்துரையாடல்கள் வேறுபட்ட சமூகங்கள் மற்றும் நாகரிகங்கள் மத்தியில் எதிர்கால ஒத்துழைப்புக்கு வழிவகுக்கலாம் என்று லைங் கூறினார்.

இந்த மகாநாட்டில் கல்விப் பரிமாற்றங்கள் பற்றிய பிரச்சினைகளிலேயே தான் கவனத்தைக் குவித்திருப்பதாக பெய்ஜிங்கில் வியட்நாமிய பரிமாற்ற மாணவியாக கல்வி பயிலும் பான் தை கொக் ஹான் கூறினார்.

அண்மைய வருடங்களில், சீனாவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றங்கள் அதிகரித்து வருவது சகஜமாகி விட்டது.2017 ஆம் ஆண்டில் மொத்தம் 18,8000 வெளிநாட்டு மாணவர்கள் கல்விகற்பதற்காக யுனானுக்கு வந்தார்கள்.தென்மேற்கு சீனாவின் எல்லை மாகாணமான யுனான் தென்கிழக்காசியாவுக்கும் தெற்காசியாவுக்குமான ஒரு நுழைவாயிலாக இருக்கிறது.

சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆசிய நாடுகளில் புதிய நேயர்களைக் கவர்ந்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.வியட்நாமின் எல்லையோரம் இருக்கும் குவாங்சியில் உள்ள தொலைக்காட்சி நிலையம் 2015 தொடக்கம் 2018 வரை சீனத் தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் 130 க்கும் அதிகமான பாகங்களையும் விவரணத்திரைப்படங்களின் 196 பாகங்களையும் கணனித் தயாரிப்பு நிகழ்ச்சிகளின் 104 பாகங்களையும் வியட்நாமிய மொழிக்கு மாற்றம் செய்திருந்தது.

"சீனாவும் வியட்நாமும் ஒத்த கலாசாரங்களைக் கொண்டவை.சீனத் தொலைக்காட்சித் தொடர்களில் முக்கியத்தும் கொடுக்கப்படுகின்ற சமூகப்பிரச்சினைகள் வியட்நாமியர்கள் மத்தியில் அவர்களின் பிரச்சினைகளை எதிரொலிப்பவையாக நோக்கப்படுகின்றன" என்று வியட்நாமிய சமூக விஞ்ஞான அகாடமியைச் சேர்ந்த ஆய்வாளர் புங் தி ஹியூ கூறினார்.

பரிமாற்ற மாணவியான பான் தை கொக் ஹானும் இனத்துவ ஆடைவகைகளையும் தேநீர் அருந்தும் கலாசாரத்தையும் சுட்டிக்காட்டி கலாசார ஒற்றுமைகளை எதிரொலித்தார். "ஆசியர்களான நாம் நெருக்கமான நண்பர்களாக இருக்க வேண்டும். எமது பிணைப்புக்களை ஆழமாக்குவதற்கு நண்பர்கள் கூடுதலாக தொடர்பாடல்களை வளர்க்க வேண்டும்" என்று பான் சொன்னார். (சின்ஹுவா)

Wed, 05/15/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக