நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒக்டோபரில் வீழ்ந்ததே முதல் அடி

ஈஸ்டர் தினத்தில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை விட ஒக்டோபர் 26 அரசியல் சதித்திட்டத்தினால் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

எனினும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேஅமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய நிதியமைச்சர்; 

நாடு சர்வதேச ரீதியாக புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நாம் அதிகாரத்துக்கு வந்தோம். அதன் பின்னர் அரசாங்கம் மேற்கொண்ட ஜனநாயக செயற்பாடுகள் காரணமாக சர்வதேச நாடுகள் எமது தாய் நாட்டின் மீது நம்பிக்கை கொண்டு உதவ முன்வந்தன.   இதனால் எமது நாட்டையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடிந்தது.

நாம் மீளக் கட்டி எழுப்பிய நாட்டின் பொருளாதாரத்துக்கு முதலாவது அடியாக ஒக்டோபர் அரசியல் சதியிருந்தது. அந்த சட்டவிராேத ஆட்சி இடம்பெற்ற குறித்த 56நாட்களில் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதா தர நிர்ணயத்தில் எமது நாடு பின்னடைவு கண்டது. எனினும் எமது சுயாதீன நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மீண்டும் எமக்கு நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடிந்தது. இதனால் சர்வதேச நாடுகளால் எமது நீதித்துறைக்கு பெரும் கெளரவம் ஏற்பட்டது.

பின்னர் வீழ்ச்சுயுற்ற ரூபாவின் பெறுமதி குறிப்பிட்டளவு அதிகரிக்க ஆரம்பித்தது.

இவ்வாறானான நிலையிலே ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது. ஒக்டோபர் அரசியல் சதித்திட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கு மேற்கொள்ளப்பட்ட மரண அடிக்கு நிகரான தாக்குதலொன்றே இதுவாகும்.

பயங்கரவாத தாக்குதல் காரணமாக எமது நாட்டுக்கு அதிக அந்நியச்செலாவணியை பெற்றுத்தரும் சுற்றுலாத்துறை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை வர்த்தகத்தை கட்டியெழுப்ப நாம் பாரிய சலுகைகளை வழங்க தீர்மானித்திருக்கின்றோம். அதேபோன்று பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏனைய வர்த்தக நிலையங்களை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வெளிநாடுகளின் தூதரங்களால் விடுக்கப்பட்டிருந்த தடையை நீக்கி எமது நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம்அந்த நாடுகளின் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 

Fri, 05/24/2019 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை