துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க முயன்ற மூவர் பொலிஸாரால் கைது

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற சம்பவத்தை தொடர்புபடுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இரண்டு துண்டுப்பிரசுரங்களை நாட்டிலுள்ள 600 பௌத்த விகாரைகளுக்கு தபால் மூலம் அனுப்புவதற்கு தயாரான பிரபல அமைச்சரொருவரின் சகா மற்றும் இரண்டு ஊழியர்களையும் கொழும்பு கோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் குறித்த அமைச்சுக்கு சொந்தமான வாகனமொன்றையும் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் இருவரையும் மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் எஸ் பத்திநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கைதுசெய்யப்பட்டவர்களுள் அளவ்வையை வசிப்பிடமாகக் கொண்ட தனுக்க பிரியதர்ஷன என்பவர் மேற்படி அமைச்சின் ஊடகப் பிரிவில் படப்பிடிப்பாளராக செயற்படுகின்றார். பொல்கொல்லையை வசிப்பிடமாகக்கொண்ட கவிந்து தட்சில என்பவர் அமைச்சின் சாரதியாக செயற்பட்டவர் அமைச்சரின் உறவினரென குறிப்பிடப்படும் நபர் வத்தேகம பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவராவர். தனியார் விளம்பர நிறுவனமொன்றை நடத்திச் செல்கின்ற அவர் மேற்படி அமைச்சில் பிரசார செயற்பாடுகளை பெற்றுக்கொள்பவரென்றும் தெரியவந்துள்ளது.

மேற்படி மூவரும் நேற்றைய தினம் தபால் பரிமாற்ற நிலையத்திற்கு வந்து மேற்படி விகாரைகளுக்கு குறித்த கடிதங்களை அஞ்சலிடுவதற்கு முற்பட்டபோதே கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகர லியனகே தலைமையிலான குழுவினர் அவர்களைக் கைதுசெய்தனர். பொலிஸார் அங்கு சென்று குறித்த கடித பார்சல்களை சோதனையிட்டபோது அந்த துண்டுப் பிரசுரங்கள் ஜனாதிபதிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவருக்கு சேறு பூசும் வகையில் வார்த்தைப் பிரயோகங்களை உள்ளடக்கியதாக  காணப்பட்டமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அம் மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

விசேட அறிவித்தல் என்ற பெயரில் அந்த துண்டுப்பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டிருந்ததுடன் உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை துண்டுப்பிரசுரங்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக கைதுசெய்யப்பட்ட சம்பத் குமார பொலிஸாரது விசாரணையில் தெரிவித்தார். அத்துடன் இத்  துண்டுப் பிரசுரங்கள் குறித்த அமைச்சிலேயே தயாரிக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேற்படி மூன்று சந்தேக நபர்களையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.                                       (ஸ)

Fri, 05/03/2019 - 06:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை