ஊரடங்கு முற்றாக நீக்கம்; முப்படை, பொலிஸ் உஷார்

வன்முறையிலீடுபட்டவர்கள் பொலிஸில் சரணடைய காலக்ெகடு

வடமேல் மாகாணம் உட்பட நாடு முழுவதிலும் தற்பொழுது முழுமையாக அமைதியான சூழல் நிலவுவதால் ஊரடங்குச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லை என்பதற்காக பாதுகாப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் வழக்கம் போன்று முப்படையினர் மற்றும் பொலிஸார் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை,வன்முறையில் ஈடுப்பட்டு அப்பாவி மக்களின் சொத்துக்களுக்கும் உடமைகளுக்கும் பாரியசேதம் விளைவித்த சந்தேக நபர்களை தேடி கைது செய்யும் நடவடிக்கை தொடர்வதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்வதற்கு முன்னரேஅருகிலுள்ள பொலிஸ் நிலையங்கள் அல்லது நீதிமன்றங்களில் சரணடையுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கின்றார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

வடமேல் மாகாணம் மற்றும் மினுவாங்கொடை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வன்முறையில் ஈடுபட்டவர்களையும், வன்முறைக்கான திட்டங்களின் பிரதான சூத்திரதாரிகளையும் தேடிக் கைது செய்யும் பொருட்டு புலனாய்வு அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, வன்முறையில் ஈடுபட்டு பொது மக்களின் சொத்துக்கள் உடமைகளுக்குச் சேதம் இழைத்தவர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் கைதாவதற்கு முன்னரே சுயமாக முன்வந்து அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ அல்லது நீதிமன்றங்களிலோ சரணடைய முடியும் என்றார்.

நாட்டில் தற்பொழுது நிலவும் அமைதியான சூழலலையும் அமைதியையும் விரும்பும் பெரும்பாலான மக்களின் நலனை கருத்திற் கொண்டே ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதில்லை என்று பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எனினும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித குறைவும் மேற்கொள்ளப்படமாட்டாது என்றார்.

இதற்கு முன்னர் குறிப்பிட்டவாறு கை துசெய்யப்பட்டவர்களில் அனேகமானவர்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்களும் உள்ளடங்குகின்றனர். எனவே, இவர்கள் தொடர்பில் நிறுவனங்களின் உள்ளக மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தொழில் புரியும் நிறுவனங்களுக்கு அறிவிக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

அத்துடன் இவர்கள் தொழிலுக்காகவோ, வெளிநாட்டு பயணங்களுக்காகவோ பொலிஸ் நற்சான்று பத்திரம் கோரும் போது வன்முறையில் ஈடுப்பட்டமைக்காக கைது செய்யப்பட்டவர்கள் என்பது கண்டிப்பாக சுட்டிக்காட்டப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஸாதிக் ஷிஹான்

Fri, 05/17/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக