ஹற்றனில் தேவாலயத்தை படம்பிடித்த இருவர் பொலிஸில் சரண்

ஹற்றன் திருச்சிலுவை தேவாலயத்தை படமெடுத்த சம்பவத்தோடு தொடர்புடைய இருவர் தமது பெற்றோருடன் பொலிஸ் நிலையத்தில் நேற்று ஆஜராகியுள்ளனர்.

கடந்த மாதம் 7ஆம் திகதி ஹற்றன் திருச்சிலுவை தேவலாயத்தை இருவர் படமெடுக்க வந்ததை அங்கிருந்தவர்கள் கவனித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். அதன் பின்னர் இது தொடர்பில் பங்கு தந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களையடுத்தே ஹற்றன் திருச்சிலுவை தேவாலயத்திற்கும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கமைய இது தொடர்பில் ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. ஹற்றன் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊடகங்களின் ஊடாகச் செய்தி வெளியானதை தொடர்ந்து தேவாலயத்தை பார்வையிட்டதாகக் கூறி காணொளியிலிருந்த இளைஞர்கள் இருவர் நேற்றுக் காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்

இவர்கள் கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கடந்த மாதம் 07ஆம் திகதி தொழுகைக்காக ஹற்றன் பகுதிக்கு வருகை தந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆகிய தமக்குப் பயங்கரவாதத்தோடு எவ்வித தொடர்பும் இல்லையெனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் கொழும்பு பிரதான பள்ளிவாசலில் இருந்து ஜமாத் தொழுகைக்காக நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் தொழுகைக்காக அனுப்பிவைக்கப்படுவதாகவும், இவர்கள் ஹற்றன் பகுதிக்கு வருகை தந்தது இதுவே முதல் தடவையெனவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஹற்றன் பள்ளி வாசலுக்கு வருகை தந்த போது ​ ஹற்றன் திருச்சிலுவை தேவாலயத்தை பார்வையிட வந்ததாகவும் அங்கு பூஜை ஆரம்ப நிகழ்விற்காக மணி சத்தத்தினை கேட்டபிறகு இவர்கள் அவ்விடத்திலிருந்து சென்றதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஹற்றன் விசேட நிருபர்

 

 

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை