அனைத்து மக்களும் நம்பிக்கை இழக்க இடமளிக்க முடியாது

முஸ்லிம் சிவில் சமூகத்தினருடன் ஜனாதிபதி சந்திப்பு

 அடிப்படைவாத சிறிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாட்டினால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கிடையேயும் காணப்படும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

ஒருவருக்கொருவர் அச்சத்தோடும் சந்தேகத்தோடும் நோக்குவதனால்

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு பயங்கரவாதத்தை உரியவாறு இனங்கண்டு அதனை பாதுகாப்புத்துறையினர் வெற்றிகரமாக அழித்துவரும் பின்னணியில் புரிந்துணர்வுடனும் நம்பிக்கையுடனும் நாட்டினுள் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் சிவில் சமூக தலைவர்களுடன் நேற்று (06) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த முஸ்லிம் சிவில் சமூக தலைவர்கள், பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினர் இத்தகைய மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதோடு, அவர்கள் இந்நாட்டின் ஏனைய மதங்களை சார்ந்த மக்களோடு மிகுந்த ஒத்துழைப்புடன் வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் சந்தேகத்தோடு நோக்குவதால் அவர்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள சிரமங்கள் தொடர்பாக முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியதோடு, அனைத்து இன மக்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தமது ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.

மேலும் மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்காக பாதுகாப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு தமது பரிபூரண ஒத்துழைப்பினை பெற்றுத்தரும் அதேவேளை, அடிப்படைவாதக் கொள்கைகள் உருவாகுவதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் கட்டுப்படுத்துவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஒரு சில இஸ்லாமியர்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளை இல்லாதொழித்து அவர்களுக்கு உண்மை நிலையை தெளிவுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றும் தற்போது முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தினால் எந்தவொரு இனமும் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் அனைவரது கௌரவத்தையும் பாதுகாத்து ஒரு நாடு என்ற வகையில் இந்த சவாலை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை இதன்போது முஸ்லிம் சிவில் சமூக தலைவர்கள் பாராட்டியதோடு, இத்தகையதொரு நிலைமையில் நாட்டில் அமைதியான சூழலை பேணுவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் முன்னெடுத்துவந்த நல்லிணக்க வேலைத்திட்டங்களும் உறுதுணையாக அமைந்தனவென அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Tue, 05/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை