மரதன் ஓட்டத்தில் கிருஷாந்தினிக்கு வெள்ளிப் பதக்கம்

தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனையான வேலு கிருஷாந்தினி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தம்மிக்க அருணசிறியும், பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த நிசன்சலா பண்டாரவும் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான சைக்கிளோட்டம், மரதன் ஓட்டம் மற்றும் வேகநடை உள்ளிட்ட மூன்று போட்டிகள் கடந்த 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை அநுராதபுரத்தில் நடைபெற்றன.

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக இவ்வனைத்து போட்டிகளையும் திறந்த மட்ட போட்டிகளாக நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி அநுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்த்ர மைதானத்துக்கு அருகில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தம்மிக்க அருணசிறி பெற்றுக்கொண்டார். போட்டித் தூரத்தை அவர் 2 மணித்தியாலம் 29.15 செக்கன்களில் பூர்த்தி செய்தார்.

இதேநேரம், குறித்த போட்டியில் கடந்த வருடம் தங்கப் பதக்கத்தை வென்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஜீ.டி சந்தருவன் இரண்டாவது இடத்தையும் (2 மணி. 31.59 செக்.), அதே மாகாணத்தைச் சேர்ந்த திஸ்ஸ குணசேகர மூன்றாவது இடத்தையும் (2 மணி. 32.03 செக்.) பெற்றுக் கொண்டனர்.

இதனிடையே, பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த நிசன்சலா பண்டார தங்கப் பதக்கத்தை வென்றார். போட்டித் தூரத்தை 2 மணித்தியாலங்கள் 59.40 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார். இவர் கடந்த வருடம் வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் வெள்ளிப் பதக்கத்தை மலையகத்தைச் சேர்ந்த வேலு கிருஷாந்தினி பெற்றுக் கொண்டார், இவர் போட்டித் தூரத்தை 3 மணித்தியாலம் 03.38 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இதேநேரம், போட்டித் தூரத்தை 3 மணித்தியாலம் 04.39 செக்கன்களில் நிறைவு செய்த சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த தில்ஹானி லியனகே வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் முதல் 10 இடங்களைப் பெற்றுக்கொண்ட வீராங்கனைகளில் ஐந்து பேர் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இருபாலாருக்குமான 20 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட வேகநடைப் போட்டி கடந்த 25ஆம் திகதி நடைபெற்றது.

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக திறந்த மட்டப் போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடளாவிய ரீதியிலிருந்து 59 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

இதன் ஆண்கள் பிரிவில் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சந்தருவன் துனுக்கார தங்கப் பதக்கத்தையும், பெண்கள் பிரிவில் தென் மாகாணத்தைச் சேர்ந்த பி.பீ கயனி தங்கப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

இதில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய வேகநடை சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றியிருந்த இசுரு துனுக்கார, 2016ஆம் ஆண்டு முதற்தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

 

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை