ஜுனியர் சம்பியன் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

நாவிதன்வெளி ஊடக வலையமைப்பின் அனுசரணையில், நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள சிறுவர் கழகங்களுக்கிடையிலான 'ஜுனியர் சம்பியன் லீக்' கிண்ணத்திற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று நேற்றுமுன்தினம் (7) மாலை, சாளம்பைக்கேணி -1இல் அமைந்துள்ள அமீரலி விளையாட்டு மைதானத்தில நடைபெற்றது.

பல சிறுவர் கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியில், இறுதி ஆட்டத்திற்காக சாளம்பைக்கேணி ஜுனியர் சுப்பர் ஸ்டார் அணியும், ஜுனியர் சம்பியன் அணியும் தெரிவு செய்யப்பட்டது.

05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இவ் இறுதிப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஜுனியர் சுப்பர் ஸ்டார் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைவாக களமிறங்கிய ஜுனியர் சுப்பர் ஸ்டார் அணி 5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அணித்தலைவர் ஜகி 20 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்கு 49 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஜுனியர் சம்பியன் அணி, 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது, அணித்தலைவர் சனூஸ் அணிக்காக 17 அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

நாவிதன்வெளி தினகரன் நிருபர்

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை