பாடசாலைகளின் நிலைமை சுமுகம்; மாணவர் வரவு ஓரளவு முன்னேற்றம்

கத்தோலிக்க பாடசாலைகள் நேற்றும் திறக்கப்படவில்லை 

அரசாங்க பாடசாலைகள் திறக்கப்பட்டு நேற்றும் கல்வி நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்ற நிலையில் குறைந்தளவு மாணவர்களே பாடசாலைக்கு வருகை தந்ததாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.  

எனினும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினத்தைவிட நேற்று மாணவர்களின் வரவு சற்று அதிகரித்துக் காணப்பட்டதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.  

கொழும்பிலுள்ள பாடசாலைகளில் நேற்று முன்தினத்தோடு ஒப்பிடுகையில் அதனைவிட ஐந்து வீத அதிகரிப்பே நேற்று இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கிணங்க சில பாடசாலைகளில் ஒன்றிணைந்த கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆசிரியர் அதிபர்களின் வரவு 70வீதமாக இருந்ததுடன் சில வகுப்புகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்களே வருகை தந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். வடமேல் மாகாணத்தில் நேற்றைய தினம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டு கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்தது.  

அரசாங்கம் வெறுமனே மாணவர்களை பாடசாலைக்கு வருகை தருமாறு கூறுகி்றதே தவிர அதற்குரிய செயற்பாடுகளையும் அவதானத்தையும் செலுத்தத் தவறியுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்தது.  

இதேவேளை, கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் நேற்று கல்வி நடவடிக்கைககளுக்காக திறக்கப்படுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதும் நேற்று எந்தப்பாடசாலைகளும் திறக்கப்படவில்லை. இது தொடர்பில் பேராயரின் ஊடகப் பேச்சாளர் எட்மன்ட் விக்கிரமரத்ன விடுத்துள்ள அறிக்கையில் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பாடசாலைகளைத் திறக்கும் பொறுப்பை அதிபர்களிடமே ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இதேவேளை கல்வியியற் கல்லூரிகளுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 21ஆம் திகதி நடத்தப்படுமென பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 21ஆம்திகதி 20கல்வியியற் கல்லூரிகளுக்கு இறுதிப் பரிட்சை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)    

லோரன்ஸ் செல்வநாயகம்  

 

Wed, 05/15/2019 - 07:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை