நிரந்தர சுபீட்சத்துக்கு வெசாக் தினத்தில் உறுதி பூணுவோம்

புத்தபிரான் போதித்த “குரோதத்தினால் குரோதம் தணியாது. அன்பினாலேயே குரோதம் தணியும்.” என்ற நிலையான உண்மையை நோக்கி மீண்டும் மீண்டும் எமது மனங்களை செலுத்த வேண் டிய காலமே இதுவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வெசாக் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்திற்காக அடுத்தவரை அழிப்பதற்குப் பதிலாக அளவற்ற அமைதியைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புதல் பற்றிய  புத்தபிரானின் போதனைகளை இந்த அருமையான பௌர்ணமி தினத்தில் நாம் மீண்டும் மீட்டிப் பார்த்தல் வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கிறிஸ்துவுக்கு முன் ஆறாம் நூற்றாண்டில் அன்றைய பாரதத்தின் சாக்கிய இராச்சியத்தில் பிறந்து, நிரஞ்சனா நதிக்கரையில் அமைந்துள்ள புத்தகயாவின் போதிமர நிழலில் ஞானம் பெற்று, குசினாராவின் உபவத்தன வனத்தில் பரிநிர்வாணமடைந்த புத்த பிரானின் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை நினைவுகூர்ந்து பூஜிக்கும் அதி உன்னத வெசாக் பௌர்ணமி தினமே இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆறு வருடங்கள் கங்கைக் கரையில் பயணித்து ஆசான்களின் தர்ம மார்க்கத்தை ஆராய்ந்து கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்ட சித்தார்த்தர், இறுதியில் வீரியம், உறுதிப்பாடு, பக்தி மற்றும் அறிவு ஆகியவற்றைக் கொண்டு மானிட அறிவினாலேயே ஞானம் பெற்றார்.

பீதி மற்றும் அபாயம் அற்ற பரஸ்பர நம்பிக்கைக்குப் பாத்திரமான கருணை மிகுந்த சமூகத்தின் உருவாக்கத்திற்காக புத்தபிரான் போதித்த “குரோதத்தினால் குரோதம் தணியாது. அன்பினாலேயே குரோதம் தணியும்.” என்ற நிலையான உண்மையை நோக்கி மீண்டும் மீண்டும் எமது மனங்களை செலுத்த வேண்டிய காலமே இதுவாகும்.

பௌத்தர்கள் அல்லாதோரை பௌத்தர்களாக மாற்றுவதற்காகவோ அல்லது புத்தரின் பெயரினாலோ ஒரு துளி இரத்தத்தைக் கூட சிந்தாது, தர்ம மார்க்கத்தை அற வழியிலேயே எடுத்துக்கூறும் 2500 வருடங்களுக்கும் மேலாக எம்மால் பின்பற்றப்பட்டு வரும் உன்னத பௌத்த வரலாறு பற்றிய புரிந்துணர்வைக் கொண்டுள்ள நாம், ஆயுத பலம் என்பது தற்காலிகமானதே என்பதை புரிந்து கொண்டவர்களாகவே இருக்கின்றோம்.

எந்த குறிக்கோளைக் கொண்டிருந்த போதிலும் பாவங்கள் நரகத்திற்கான மார்க்கமே என்பதை அறிந்து புத்தபிரானின் போதனைகளுக்கமைய கருணை உள்ளத்தோடு அதர்மத்தை தர்மத்தால் அழிக்கும் மார்க்கத்தில் பிரவேசித்து நாட்டில் நிலையான சுபீட்சத்தை ஏற்படுத்த இந்த வெசாக் தினத்தில் உறுதி பூணுவோம்.

இலங்கைவாழ் பௌத்த பெருமக்களுக்கும் உலகவாழ் பௌத்தர்களுக்கும் இந்த வெசாக் பௌர்ணமி நிம்மதியை கொண்டுவர வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Sat, 05/18/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக