பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைதானவரை விடுவிப்பதற்கு இலஞ்சம் ​கொடுக்க முற்பட்டவர் கைது

தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்காக, ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் ​கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில், ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலையத்தால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரொருவரை விடுவிப்பதற்கு 5 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலையில், முதற் கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபாயை இன்று (08) காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்க முற்பட்ட வேளையில் ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ அறையில் வைத்து இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை அநுராதபுர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

Wed, 05/08/2019 - 11:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை