மீட்டுத் தரும்படி ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தல்

அமெரிக்கா பறிமுதல் செய்த கப்பல்:

அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட தங்களது சரக்குக் கப்பலை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஐ.நாவிடம் வட கொரியா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸூக்கு, ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் கிங் சாங் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எங்களது வைஸ் ஹானஸ்ட் சரக்குக் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்திருப்பது சட்டத்துக்குப் புறம்பான, பதற்றத்தைத் தூண்டிவிடும் நடவடிக்கையாகும்.

அமெரிக்காவின் அந்த நடவடிக்கை, அந்த நாடு ஒரு முரட்டுத் தனமான நாடு என்பதையும், சர்வதேச சட்டங்கள் குறித்து அதற்கு அக்கறை இல்லை என்பதையுமே காட்டுகிறது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள அந்தக் கப்பலை அமெரிக்கா திருப்பி அளிப்பதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம், கொரிய தீபகற்பத்தின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படுவதோடு, ஐ.நாவின் பாரபட்சமற்ற தன்மையும் நிரூபிக்கப்படும் என்று அந்தக் கடிதத்தில் கிங் சாங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுக்கும் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு தோல்வியடைந்தது.

அந்தப் பேச்சுவார்த்தையில், வட கொரியாவின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த டிரம்ப் பிடிவாதமாக மறுத்தார்.

இந்த நிலையில், ஓராண்டுக்கும் மேல் நிறுத்தி வைத்திருந்த ஏவுகணை சோதனைகளை வட கொரியா மீண்டும் ஆரம்பித்தது. அதற்குப் பதிலடியாகவே, பொருளாதாரத் தடைகளை மீறியதாகக் கூறி, வட கொரிய சரக்குக் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை