வடக்கில் அதிகரித்துள்ள பாதுகாப்பு கெடுபிடிகளை தளர்த்துங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து வடக்கில் அதிகரித்துள்ள பாதுகாப்புக் கெடுபிடிகளைத் தளர்த்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மக்கள் பலத்த

சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். மன்னாரிலிருந்து வவுனியா வரையான 80 கிலோ மீற்றர் தூரத்திற்குச் செல்லும் பயணி ஒருவருக்கு 5 இடங்களில் பரிசோதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகிறது. இறங்கி 150 மீற்றர் வரை நடக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கூட இவ்வாறான நிலைமை இருக்கவில்லை. மன்னார்- யாழ்ப்பாணம்,வவுனியா -

 யாழ்ப்பாணம், வவுனியா - முல்லைத்தீவு என சகல பாதைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பரீட்சிக்கப்படுகிறது. யார் யாரை விசாரிக்க வேண்டுமோ அவர்களை விசாரிக்காது இவ்வாறு அப்பாவி மக்கள் கஷ்டப்படுத்தப்படுகின்றனர்.

வவுனியா கூட்டுறவு திணைக்களத்திற்குச் சொந்தமான பயிற்சி நிலையம் புனர்வாழ்வு அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கு ஒரே ஒரு முன்னாள் புலி உறுப்பினரே இருப்பதால், அவரை விடுவித்து இந்த நிலையத்தை கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்க வேண்டும்.

இதற்குப் பதிலளித்த பிதமர் ரணில் விக்கிரமசிங்க,

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் இந்த நிலையம் இயங்குகிறது. நீதிமன்ற உத்தரவுடன் அனுப்பப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது. சார்ள்ஸ் எம்.பியுடனும் அதிகாரிகளுடனும் பேசி தேவைாயான நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை