தேசிய மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளராக சுனில் குணவர்தன

அண்மைக்காலமாக வெற்றிடமாக இருந்து வந்த இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்நாட்டின் கீர்த்திமிக்க மெய்வல்லுனர் பயிற்சியாளர்களில் ஒருவரான சுனில் குணவர்தனவை நியமிக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சுனில் குணவர்தனவை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இதற்கான அனுமதி கிடைத்தவுடன் தேசிய மெய்வல்லுனர் குழுமத்தை அவரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான சுனில் குணவர்தன, இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டில் பலமுன்னணி வீரர்களை உருவாக்கிய அனுபவமிக்க பயிற்சியாளர் ஆவார். தனிப்பட்ட முறையில் பயிற்சியாளராகக் கடமையாற்றி இலங்கைக்காக அதிக சர்வதேசப் பதக்கங்களை பெற்றுக்கொடுத்த கௌரவமும் இவரைச்சாரும்.

இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் வீரர்களான தமயந்தி தர்ஷா,மஹேஷ் பெரேரா,நயன்திகுமாரி,ரொஹான் பிரதீப் குமார,ரோஹித புஷ்பகுமாரமற்றும் பிரசன்ன அமரசேகர ஆகியோர் இவரது பயிற்றுவிப்பின் கீழ் பல சர்வதேச வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட வீரர்களாவர்.

அண்மைக்காலமாக கனிஷ்ட மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஷெலின்டா ஜென்சன் மற்றும் சதீபா ஹெண்டர்சன் ஆகிய வீராங்கனைகளும் சுனில் குணவர்தனவின் கீழ் பயிற்சிகளைப் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை மெய்வல்லுனர்கள்,ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 9 தங்கப் பதக்கங்களையும்,தெற்காசிய விளையாட்டு விழாவில் 25 தங்கப் பதக்கங்களையும்,ஆசிய கிரான்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 28 தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர். ஆசிய விளையாட்டுவிழாவில் 3 தங்கப் பதக்கங்களையும்,உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஒருவெண்கலப் பதக்கத்தையும் இவரது பயிற்றுவிப்பின் கீழ் இந்நாட்டு மெய்வல்லுனர்கள் சுவீகரித்துள்ளனர்.

1972ஆம் ஆண்டு ஜேர்மனியின் மியுனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுனில் குணவர்தன, 1974ஆம் ஆண்டு ஈரானின் டெஹ்ரானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுவிழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பேர்ட்டியில் தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விசேட அழைப்பின் பேரில் கடந்த சிலவருடங்களாக மெய்வல்லுனர் அணியின் சிறப்பு பயிற்சியாளராக கடமையாற்றிவந்த கியூபா நாட்டைச் சேர்ந்த சேர்ஜியோமானு எல் ரொட்ரிக்ஸ் ருய்ஸ்,எதிர்வரும் ஜுலை மாதம் முதல் இலங்கை மெய்வல்லுனர் அணியின் சுவட்டு நிகழ்ச்சிகளின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(பீ.எப் மொஹமட்)

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை