பாகிஸ்தான் கிறிஸ்தவப் பெண் நாட்டை விட்டு வெளியேற்றம்

மதநிந்தனை குற்றச்சாட்டு:

பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த கிறித்தவப் பெண் ஆசியா பீபி நாட்டைவிட்டு சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது பக்கத்துவிட்டு பெண்ணுடன் நடைபெற்ற சண்டை ஒன்றில் அவர் முகமது நபிகளை அவமதிக்கும் விதமாக பேசிவிட்டார் என 2010ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

அவர் எட்டு ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்தார். நாடு முழுவதும் இது முக்கியதுவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்பட்டது.

ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என ஆசியா பீபி தெரிவித்து வந்தார்.

அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஆனால் அவரின் குடும்பத்தினர் சிலர் கனடாவில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டைவிட்டு வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்ட நேரத்தில் அவர் ரகசியமான ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டவுடன் மத கடும்போக்காளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தாராளவாத கொள்கை கொண்டவர்கள் அவரை விடுவிக்க கோரினர். நான்கு குழந்தைகளுக்கு தாயான ஆசியா 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அண்டை வீட்டாருடன் விவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த வாக்குவாதமும் சாதாரணமான ஒரு விடயத்திற்காகத்தான் தொடங்கியது. அவர்கள் லாகூர் அருகே பழம் பறித்துக் கொண்டிருந்த போது, ஒரு பக்கெட் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சினை ஆரம்பித்தது.

தாங்கள் பயன்பாட்டுக்காக வைத்திருந்த தண்ணீரை எடுத்து ஆசியா அருந்திவிட்டார். இதனால், தங்கள் நம்பிக்கையின்படி அந்த தண்ணீரின் புனிதம் கெட்டுவிட்டது. இனி அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாது என்று கூறி சச்சரவிட்டனர்.

ஆசியா மதம் மாற வேண்டும் என்று அவர்கள் வாதிட்டதாகவும், அதற்கு மறுப்பாக முகமது நபியை ஆசியா நிந்தித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

சச்சரவிட்டதை ஒப்புக் கொண்ட ஆசியா ஆரம்பத்தில் இருந்தே மத நிந்தனை குற்றத்தை மறுத்து வந்தார்.

ஆசியா விடுதலைக்கு பின்னர், அவருக்கு அடைக்கலம் தர பல நாடுகள் முன்வந்தன.

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை