தேர்தலை இலக்குவைத்து வன்முறைகளை ஏற்படுத்தும் அரசியல் சூதாட்டமே நடக்கிறது

நாட்டை தீ வைத்து அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று வன்முறைகளை ஏற்படுத்தும் அரசியல் சூதாட்டம் இடம்பெற்று வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கண்டி குண்டசாலை கோணவெல தெற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இசுரு உயன்புர எழுச்சிக் கிராமம் நேற்றுமுன்தினம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இது உதா கம்மான திட்டத்தின் மூலம் மக்களுக்கு 190 ஆவது கிராமமாகும். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

திரைப்படக் காட்சிகளை போன்றே இன்று இலங்கை அரசியலில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவை வெறும் நடிப்பு மாத்திரமே. இதனால் எவ்வித சேவைகளும் மக்களுக்கு இடம்பெற போவதில்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது காலத்தின் தேவையாகும். இது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும். ஆனால், மக்களின் பிரச்சினைகளுக்கு எவரும் முன்னுரிமையளிப்பதில்லை. நாட்டை தீ வைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் சூதாட்டமே நடைபெற்று வருகிறது.

83ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று சில அரசியல் குழுக்கள் நாட்டுக்கு சேதங்களை விளைவித்தேனும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். எதிர்வரும் தேர்தல்களில் தெரிவாகும் ஜனாதிபதியும் பிரதமரும் யார் என்ற அரசியல் சூதாட்டம் அரங்கேற ஆரம்பித்துள்ளது. இது நாட்டுக்கு பெரும் பாதகமாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Sat, 05/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை