ஈரானின் உலோக ஏற்றுமதிக்கு எதிராக அமெரிக்கா புதிய தடை

அணு சக்தி உடன்பாட்டின் முக்கிய கடப்பாடுகள் சிலதில் இருந்து ஈரான் விலகிக் கொண்ட நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் மீது மேலும் அழுத்தங்கள் கொடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதன்படி எண்ணெய்க்கு அடுத்ததாக ஈரானின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளான உலோகங்கள் மீது தடை விதித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப், ஈரான் தலைவர்களை சந்தித்துப் பேசி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆறு வல்லரசுகளுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட 2015ஆம் ஆண்டின் அணு ஒப்பந்தம், ஈரான் தமது அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவதற்கு பிரதிபலனாக, அதன் மீது விதிக்கப்பட்ட தடைகளில் இருந்து விலக்கு அளிப்பதற்காக எட்டப்பட்டதாகும்.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா தன்னிச்சையாக விலகிக்கொண்டது. ஆனால், மற்ற ஐந்து நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் நீடிப்பதாக அறிவித்தன.

ஒப்பந்த விதிகளை செயல்படுத்தும் கடமையை நிறுத்திவைத்து, அதன் மூலம் செறிவூட்டப்பட்ட யுரேனிய விற்பனையை நிறுத்திவைப்பதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை ஒப்பந்தத்தை கைவிடவேண்டாம் என்று ஈரானை எச்சரித்தன. ஈரானின் செயலை “வரவேற்கத் தகாத” நடவடிக்கை என்று அவை வருணித்தன. மேலும் ஒப்பந்தத்தின்படி தமது கடைமையை ஈரான் நிறைவேற்றினால்தான் தங்களால் அந்த ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியும் என்றும் அவை தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி ஓராண்டாகும் நிலையில் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.

இந்நிலையில் புதிய தடைகளை விதித்த பின்னர் அது பற்றி குறிப்பிட்ட டிரம்ப், “தொழில்துறை உலோகங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானுக்கு கிடைக்கும் வருவாயை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இது 10 வீதத்தை அளித்து வருகின்ற துறை. இந்த தடையின் மூலம், தங்கள் நாட்டின் துறைமுகங்களில் ஈரான் நாட்டு உலோகங்களை அனுமதிப்பதை நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம் என்று பிற நாடுகளுக்கு அறிவிக்கிறோம்.

தங்கள் நடத்தையை அடிப்படையில் ஈரான் மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்நாடு மேலும் புதிய நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார் டிரம்ப்.

உலகம் முழுவதும் ஈரான் நாட்டு எண்ணெயை விற்பதற்கு ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் டிரம்ப்.

“ஈரான் தலைவர்கள் உடனான சந்தித்து ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதை எதிர்நோக்கியுள்ளேன். அதன் மூலம் ஈரான் பெறுவதற்குரிய அதன் எதிர்காலத்தை தருவதற்கு அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன், அமெரிக்கப் படையினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்றை ஈரான் நாட்டை நோக்கி அனுப்பியது அமெரிக்கா. அத்துடன் முன்னறிவிப்பின்றி ஈராக் சென்றார் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோ.

இவை ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதாக உள்ளது.

தொடர்ந்து அமெரிக்கத் தடையால் ஈரான் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பண மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஈரானின் ஆண்டு பண வீக்க விகிதம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை