கரீபியன் ப்ரீமியர் லீக்: ஐந்து இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ரி-20 கிரிக்கெட் திருவிழாவான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாட இலங்கை அணியைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இலங்கை அணியின் அனுபவ முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவரையடுத்து, தற்போது பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் அசத்திவரும் இசுரு உதான, செயின்ட் கிட்ஸ் – நெவிஸ் அணிக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் முதல் சுற்று வரைவில் வாங்கப்பட்டதுடன், இருவருக்கும் தலா 160,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்றுமொரு இலங்கை வீரரான வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் திசர பெரேரா, லசித் மாலிங்க விளையாடும் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இவர் 90,000 அமெரிக்க டொலர்கள் கொடுத்து அந்த அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல, செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், 30,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இறுதியாக சுழற்பந்து சகலதுறை வீரர் சீகுகே பிரசன்ன, டிரின்பகோ நைட் ரைடர்ஷ் அணிக்காக இணைக்கப்பட்டார்.

இம்முறை கரீபியன் ப்ரீமியர் லீக் வரைவில் மொத்தமாக 536 வீரர்கள் இணைந்திருந்ததுடன், அதில் 34 இலங்கை வீரர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர். இதில், இலங்கையின் 5 வீரர்கள் மாத்திரமே வரைவின் மூலம் அணிகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இம்முறை வீரர்கள் வரைவில் அதிகமான தொகைக்கு இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், பாகிஸ்தானின் சதாப் கான் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அன்ரே ரசல் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் வாங்கப்பட்டிருந்தனர்.

இம்முறை கரீபியன் ப்ரீமியர் லீக் நடைபெறும் காலத்தில் இலங்கை அணிக்கு எவ்வித மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரும் இல்லை என்பதால், இத்தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஐந்து வீரர்களும் எவ்வித தடங்கலும் இன்றி இத்தொடரில் விளையாடாலாம்.

இந்த பருவக்காலத்துக்கான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 12ஆம் திகதிவரை மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை