கிழக்குக்கு புதிய ஆளுநரை நியமிக்கக் கோரி ஹர்த்தால்

திருகோணமலை நகரம் முற்றாக முடங்கியது

கிழக்கு மாகாணத்திற்கு நியாயமானதொரு ஆளுநரை நியமிக்குமாறு கோரி நேற்று திருகோணமலையில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்ைக முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. குறிப்பாக திருகோணமலை நகரத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு காணப்பட்டன. எனினும் கிண்ணியா,மூதூர் பகுதிகளில் கடைகள் காலை நேரங்களில் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததுடன் ஜும்மா தொழுகைக்காக மீண்டும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

அரச பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.கிண்ணியாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த அரச பேரூந்தின் மீது நான்காம் கட்டை பகுதியில் வைத்து கல்வீச்சு நடத்தப்பட்டது.

அங்கொட டிப்போவுக்கு சொந்தமான பேரூந்தின் மீதும் ஐந்தாம் கட்டைப் பகுதியில் கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டது. இதில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கினை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் ஹர்த்தால் போராட்டத்திற்கு அனைத்து இன மக்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

திருகோணமலை நகர் பகுதியில் பேரூந்துகளுக்கு கல் வீசப்பட்டது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்பு வழங்கி சேவையில் ஈடுபடுத்தப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. மேலும் தனியார் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.

பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் திறந்திருந்த போதும் சிறு அளவிலானவர்களே சமுகமளித்திருந்தமையால் அவர்களும் திரும்பி வீடுகளுக்குச் சென்றனர்.

திருமலையில் உள்ள சகல இன மக்களும் தமது கடமைகளை நிறுத்தி இப் பூரண ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரொட்டவெவ குறூப், அன்புவழிபுரம் நிருபர்கள்

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை