இந்தோனேசிய தேர்தலுக்கு பிந்திய ஆர்ப்பாட்டங்களால் ஆறு பேர் பலி

ஜனாதிபதி ஜொகோ விடோடோ வெற்றிபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து இடம்பெற்ற பாரிய பேரணிகளின்போது 6 பேர் கொல்லப்பட்டு மேலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை தலைநகர் ஜகர்த்தாவில் ஆரம்பமான அமைதியான ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறையாக மாறிய நிலையில் கார்கள் தீமூட்டப்பட்டு எரியும் பொருட்கள் பொலிஸார் மீது எறியப்பட்டன.

கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோவின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலேயே மோதல் ஏற்பட்டது. கலவரம் தொடர்பில் குறைந்தது 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் ஜோக்கோ விடோடோ வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு அவர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையக் கட்டடத்துக்குள் பலவந்தமாக நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களைக் பொலிஸாரின் படைபலத்தைப் பயன்படுத்தாமல் அமைதியான முறையில் கட்டுப்படுத்தியதாகக் கூறப்பட்டது.

அதிகாரபூர்வ தேர்தல் முடிவை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பிரபாவோ சுபியாந்தோ நிராகரித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் முன்னாள் இராணுவ ஜெனரலான சுபியந்தோ தோல்வி அடைந்ததோடு அந்த முடிவுக்கு எதிரான மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.

192 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி நடைபெற்றது.

அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் பொலிஸார் குறிவிக்கப்பட்டிருந்தனர். தலைநகர் ஜகார்த்தாவில் மட்டும் 3000 பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை