அமெரிக்காவின் கூடுதல் வரிக்கு சீனா பதிலடி

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அமெரிக்கப் பொருட்கள் மீது ஜுன் 1 ஆம் திகதி தொடக்கம் 60 பில்லியன் டொலர் வரி அதிகரிப்பை சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் 200 பில்லியன் டொலர் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா இரட்டிப்பாக்கி மூன்று தினங்களிலேயே சீனா இந்த பதில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன்படி 5,140 வகையான அமெரிக்கப் பொருட்கள் மீது 5 இலிருந்து 25 வீதம் வரை, கூடுதலான வரி விதிக்கப் போவதாக சீனா குறிப்பிட்டது.

இந்த மோதல்போக்கு பங்குச் சந்தையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. ஆசியச் சந்தை நேற்று வீழ்ச்சி கண்டதோடு வோல் ஸ்ட்ரீட் வீழ்ச்சியுடனேயே மூடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதியான வர்த்தகப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கம் ஏற்படவில்லை. இந்நிலையில் எஞ்சியுள்ள சுமார் 300 பில்லியன் டொலர் மதிப்புள்ள சீன இறக்குமதிப் பொருள்கள் மீதான வரியையும் உயர்த்தத் தேவையான நடவடிக்கைகளை அரம்பிக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தமது இறக்குமதிகள் மீதான வரியை அதிகரிக்க வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவை எச்சரித்திருந்தார்.

இந்தநிலையில், அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் யேங் ஷுவாங் கூறியுள்ளார்.

“வரிகளை உயர்த்துவதால் பிரச்சினை தீராது என்பதை நாங்கள் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டோம். சீனாவுடன் சேர்ந்து இருதரப்பினருக்கும் பலன் அளிக்கக்கூடிய ஒப்பந்தத்தை போட அமெரிக்கா ஒன்றிணைந்து பணியாற்றும் என சீனா நம்பியது” என்று கெங் ஷுவாங் தெரிவித்தார்.

Wed, 05/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை