ரிஷாட்டுக்கு எதிரான செயல் இலட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு எதிரானது

52 நாள் அரசுக்கு ஆதரவு வழங்காததாலே அவருக்கு எதிராக போர்க்கொடி

52 நாள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காததன் காரணத்தினாலேயே கூட்டு எதிரணி அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நேற்று தெரிவித்தது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நீட்டப்படும் விரல்கள் அவருக்காக மட்டுமன்றி நாட்டில் வாழ்கின்ற இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என்றும் அக்கட்சி தெரிவிக்கிறது.

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வென்றாலும் தோற்றாலும் அவரை பதவியிலிருந்து விலக்கமுடியாது. அவரே விருப்பத்துடன் கையொப்பமிட்டு வெளியேற வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.

மஹிந்த அணி தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான துவேசத்தைக் கிளப்பி வருகின்றது. எப்போதும் எம்மைப்போன்ற கட்சிகள் அவசியமென்பதை அவர்கள் உணர்ந்து புத்திசாலித்தனமாக செயற்படவேண்டியது அவசியமென்றும் அக்கட்சி தெரிவிக்கிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்று நேற்றைய தினம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மேற்படி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நஜீப், சட்டத்தரணி ருஷ்டி ஹபீப், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜயதிலக்க ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இம் மாநாட்டில் தொடர்ந்தும் விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர்,

முஸ்லிம்கள் எப்போதும் ஒற்றுமையையே வலியுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போதுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசைக் கவிழ்த்து ஆட்சிக்கு வருவதற்காக சிலர் செய்யும் சதியின் ஒரு அம்சமே அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டாகும். இது அவருக்கு மட்டுமானதல்ல. நாட்டில் வாழும் 22 இலட்சம் முஸ்லிம் மக்களுக்கும் எதிரானது. நாட்டின் அமைதி, சமாதானம் குணடுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்த 22 இலட்சம் மக்களும் இந்த நோன்பு காலத்தில் தினமும் பிரார்த்திக்கின்றனர். அவர்கள் எப்போதும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் விரும்புபவர்கள்.

பயங்கரவாத குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டில் 100 க்கும் 170 க்கும் இடைப்பட்ட பயங்கரவாதிகளே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது 3,000 முஸ்லிம்களைக் கைதுசெய்து நோன்பு நாட்களில் அவர்களை வதைப்பது எந்தவகையில் நியாயமாகும்?

வாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துக்களைத் தெரிவித்தாலும் அதனை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எமது மக்கள் நோன்பு நாளில் சிறையிலடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்.

சில இனவாதக் குழுக்கள் பிரச்சினையை பூதாகாரமாக்கி தமது நோக்கங்களை நிறைவேற்றுக்கொள்ளப் பார்க்கின்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும் மக்கள் சக்தியைக் கொண்டது. எமது கட்சியில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நாம் இந்த அரசாங்கத்துக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்கள். எதிர்க்கட்சியினர் இவ்வாறு செயற்பட்டு ஆட்சிக்கு வரமுடியாது என்பதை நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். வடக்கில் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் நான்கு சபைகளை அக்கட்சி கைப்பற்றிக்கொண்டுள்ளது. அமைச்சர் ரிஷாட்டின் கொள்கைகளும் செயற்பாடுகளும் முஸ்லிம் மக்களை மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது. அவர் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் கொள்கையுடையவர்.

எனினும் இந்த விடயத்தில் ஊடகங்கள் மிக மோசமாக சேறு பூசுகின்றன. ஊடகங்கள் இனவாதத்துக்கு துணைபோகக் கூடாது. அனைத்து ஊடகங்களுமே பொறுப்புடன் செயற்பட வேண்டும். இனத்துவேசத்தை மீள கிளப்பக்கூடாது.

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முறையற்றதாகும். 10 குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக உள்ள நிலையில் அவர் பொறுப்புடன் அதற்கு தக்க பதில் வழங்கக் காத்திருக்கிறார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை