ரபேல் ஊழல் வழக்கில் மறுசீராய்வு மனு மீதான விசாரணை முடிவு

தீர்ப்பு ஒத்திவைப்பு

ரபேல் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ளது.

ரபேல் வழக்கு முடியும் கட்டத்தை எட்டி உள்ளது. இதில் மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது. ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். இதில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளது. ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் முறைகேடாக இதில் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளது என்று இந்த வழக்கில் கூறப்பட்டது.ஆனால் ரபேல் வழக்கில் டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இதற்கு எதிராக தற்போது மறுசீராய்வு மனுக்கள் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.

இது தொடர்பான மறுசீராய்வு வழக்கு இரண்டு மாதமாக நடந்தது. இந்த வழக்கில் கடந்த அமர்வின் விசாரணைதான் மிக முக்கியமானது. இதில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கசிந்த ஆதாரங்களை விசாரிக்க போவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதாவது ஆங்கில இதழில் வெளியான ஆதாரங்களை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த ஆதாரங்களை விசாரிக்க மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக மத்திய அரசு கடந்த வாரம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து இருந்தது. இதன் பின் நேற்று இந்த வழக்கில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் நேற்று அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதாவது மனுதாரர்கள் அனைவரும் 4 மணி நேரத்தில் வாதம் அனைத்தையும் முடிக்க வேண்டும். அதிக பட்சம் ஒருவர் 1 மணி நேரம் எடுக்கலாம் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

இதில் நான்கு மனுதாரர்கள் மிக கடுமையான வாதங்களை ஆதாரங்களை மத்திய அரசுக்கு எதிராக வைத்தார்கள். இதையடுத்து அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கேகே வேணுகோபால், இது ராணுவ ரகசியம் அதனால் விலை விவரங்களை தெரிவிக்க முடியாது என்று கூறினார்கள். அதேபோல் கடந்த வழக்கில் மத்திய அரசு வைத்த வாதங்களையே மீண்டும் வைத்தார். இந்த நிலையில் இதன் மீதான வழக்கு விசாரணை நான்கு மணிக்கு சரியாக நிறைவடைந்தது. அடுத்த அமர்வில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தை சிபிஐ விசாரிக்கலாமா இல்லை கூடாதா என்று இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை