உக்கிர மோதல்களை தொடர்ந்து காசா–இஸ்ரேலிடையே யுத்த நிறுத்தம்

23 பலஸ்தீனர், 4 இஸ்ரேலியர் பலி

இஸ்ரேலுடன் யுத்த நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் அறிவித்த நிலையில் காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் நீடித்த உக்கிர மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளன.

இந்த மோதல்கள் காரணமாக 23 பலஸ்தீனர்கள் மற்றும் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

நேற்றுக் காலை உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதாக காசா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அது தொடக்கம் பலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

காசா மற்றும் இஸ்ரேலிக்கு இடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக நீடித்த பரஸ்பரம் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருவதில் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தம் வழங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த யுத்த நிறுத்தம் பற்றி இஸ்ரேல் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. எவ்வாறாயினும் கடந்த வாரம் மோதல் தீவிரமடைந்தபோது காசாவுக்கு அருகில் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புகளை இஸ்ரேல் இராணுவம் நேற்று தளர்த்தியது.

இதன்படி தெற்கு இஸ்ரேலில் வசிப்பவர்கள் தமது வழக்கமான நடவடிக்கைகளுக்கு திரும்பும்படி இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

காசா மீதான தனது இறுக்குதலை தளர்த்துவதற்கு இணங்கியதன் அடிப்படையிலேயே இந்த யுத்த நிறுத்தம் எட்டப்பட்டாக காசாவின் போராட்ட அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் காசா கடற்பகுதியில் மீன்பிடி வலயத்தை 12 கடல்மைல் தொலைவாக தளர்த்துவது மற்றும் காசாவின் மின்சாரம் மற்றும் எரிபொருள் நிலையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எகிப்து அதிகாரிகளும் இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையை உறுதி செய்துள்ளனர்.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற உக்கிர மோதலுக்குப் பின் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற மிக தீவிர மோதலாக இது இருந்தது. கடந்த வார இறுதி முழுவது தெற்கு இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல் எச்சரிக்கைக்கான சைரன் ஒலித்த வண்ணம் இருந்தது. இது அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இட்டுச் செல்வதாக இருந்தது. நேற்று அதிகாலையே இந்த அபாய ஒலி தணிந்தது.

இரண்டு நாட்கள் காசாவில் போராளிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் துப்பாக்கிப் படகுகள் தாக்குதல் நடத்திய நிலையில், காசா பகுதி மீது பாரிய தாக்குதல் ஒன்றுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். 34 வயது ஹமாஸ் தளபதி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டார். அவர் இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்ட ஹமாத் அல் குதோரி, ஈரானில் இருந்து பெரும் தொகையான பணத்தை காசா போராளிகளுக்கு பரிமாற்றியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர, இரு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மூன்று சிசுக்கள் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களில் அடங்குகின்றனர். வடக்கு காசா நகரான பெயித் லஹியாவில் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு மாதக் குழந்தை மற்றும் அதன் தந்தையும் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் நகரான அஷ்கலோனில் ரொக்கெட் குண்டின் சிதைவுகள் விடோன்றில் விழுந்ததில் 58 வயது இஸ்ரேலியர் கொல்லப்பட்டார். தொழிற்சாலை ஒன்றில் ரொக்கெட் குண்டு விழுந்து மேலும் இரு இஸ்ரேலியர் தீவிர காயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் காசாவில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது 600க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவைகளில் 150க்கும் அதிகமானவை இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று காசா போராட்டக் குழுக்களின் சுமார் 320 இலக்குகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காசாவை ஒட்டிய இஸ்ரேல் எல்லை வேலிக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படைகள் மீது பலஸ்தீன போராளிகள் ஸ்னைப்பர் துப்பாக்கி கொண்டு தாக்குதல் நடத்தியதை அடுத்தே தற்போதைய வன்முறை வெடித்தமை குறிப்பிடத்தக்கது

இஸ்ரேல் மற்றும் எகிப்தின் முற்றுகை, அண்மைய வெளிநாட்டு உதவிகள் நிறுத்தம், மற்றும் பலஸ்தீன அதிகார சபையின் தடைகள் காரணமாக ஹமாஸ் ஆட்சியில் உள்ள சுமார் 2 மில்லியன் மக்கள் வசிக்கு காசா பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு தொடக்கம் காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் போராளிகளுக்கு ஆயுதம் செல்வதை தடுப்பதற்கு இந்த முற்றுகை அவசியம் என்று இஸ்ரேல் குறிப்பிடுகிறது.

Tue, 05/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை