ரசிகர்களால் விமர்சனம்

பங்களாதேஷ் அணியின் உலக கிண்ண ஆடை

பங்களாதேஷ் அணியின் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆடை தனது போட்டி அணியான பாகிஸ்தான் அணியின் ஆடைபோல் இருப்பதாக விமர்சனங்கள் அதிகரித்ததை அடுத்து மாற்று ஆடையை தயாரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

பங்களாதேஷ் தேசியக் கொடி சிவப்பு மற்றும் பச்சை நிறத்தை கொண்டதாகும். ஆனால் இந்த மாதக் கடைசியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண போட்டிக்காக கடந்த திங்கட்கிழமை ( 29) வெளியிடப்பட்ட பங்களாதேஷ் அணியின் ஆடை பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது.

“வணிக சிக்கல்கள்” காரணமாக சிவப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளும்படி உலக கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பேச்சாளர் ஜலால் யூனுஸ் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பாங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் இருந்து அடுத்தடுத்து விடுக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து அது தளர்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஆடை உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் சிவப்பும் சேர்க்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே, நாம் ஐ.சி.சி (சர்வதேச கிரிக்கெட் பேரவை) இடம் மீண்டும் கோரிக்கை விடுத்தோம். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

வீரர்களின் பெயர்கள் தற்போதிருப்பது போல் அமையும். பங்களாதேஷ் பெயர் சிவப்பில் இருக்கும் என்று யூனுஸ் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் அணியின் உடை வெளியானதை அடுத்து சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் வெடித்ததோடு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் சபர் ஹொஸைன் சௌத்ரியும் அவர்களில் உள்ளார்.

“எமது தேசிய கொடியின் நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை, ஆண்டாண்டு காலமாக பங்களாதேஷ் புலிகளின் ஆடையில் பிரதிபலித்தது. அது தொடர்ந்தும் இல்லாதது கவலை அளிக்கிறது” என்று சௌத்ரி ட்விட்டரில் குறிப்பிட்டார்.

இது பாகிஸ்தான் அணியின் ஆடையுடன் ஒத்துப்போவது பற்றி பல கிரிக்கெட் ரசிகர்களும் அவதானித்தனர். 1971 இல் பல உயிரிழப்புகளுடன் பெரும் போராட்டத்திற்கு பின்னரே பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் பாகிஸ்தான் ஆடையுடன் ஒத்துப்போவது பற்றிய விமர்சனம் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசன் தனது கோபத்தை வெளியிட்டிருந்தார்.

“ஆடையில் பங்களாதேஷ் என்று எழுதப்பட்டிருக்கிறது. எப்படி அது பாகிஸ்தானுடன் குழப்பிக்கொள்ள முடியும்?” என்று கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் நஸ்முல் கேள்வி எழுப்பினார்.

“புலியின் படம் மற்றும் BCB சின்னத்தைப் பார்த்துவிட்டு அது பங்களாதேஷ் ஆடையல்ல பாகிஸ்தான் ஆடை என்று ஒருவர் நினைத்தால் அவர் பாகிஸ்தானில் இருந்து கொள்ளட்டும்” என்று கோபத்துடன் குறிப்பிட்டார் நஸ்முல் ஹசன். பங்களாதேஷ் கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக கடந்த புதன்கிழமை புறப்பட்டுச் சென்றதோடு அந்த அணி தனது முதல் போட்டியில் ஜுன் மாதம் 2 ஆம் திகதி ஓவல் மைதானத்தில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதற்கு முன்னர் அந்த அணி எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை அயர்லாந்தில் நடைபெறும் முக்கோண ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அந்தத் தொடரில் அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் பங்கேற்கின்றன.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இம் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

Sat, 05/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை