பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய முஸ்லிம்களை மறந்துவிடக்கூடாது

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல்களை வழங்கிய முஸ்லிம் சமூகத்தை ஊடகங்கள் மறந்துவிட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தினர் தகவல்களை வழங்கியதாலேயே தற்கொலைக் குண்டுதாரிகளை சாய்ந்தமருது பிரதேசத்தில் அழிக்க முடிந்தது. பயங்கரவாதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாது உரிய நேரத்தில் தகவல்களை வழங்கியிருந்தார்கள். இவ்வாறு செயற்பட்டவர்களை ஊடகங்கள் மறந்துவிட்டன. இவர்கள் மறக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்குப் பின்னர் 52 நாட்கள் நாட்டில் ஏற்பட்ட குழப்ப சூழலே பயங்கரவாதிகள் பலமடைவதற்கு வாய்ப்பாக அமைந்ததாகவும் தினகரனுக்கு வழங்கிய செவ்வியில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் எப்பொழுதும் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையப் பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதற்கே அவர்கள் முயற்சிக்கின்றனர். இதனாலேயே குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்ற சில வாரங்களின் பின்னர் மே 13ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றன.

இந்த வன்முறைகளின் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது உறுதியாகியுள்ளது. குருநாகலின் பல பகுதிகளில் வெளிமாவட்டங்களிலிருந்து மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பில் உடனடியாக பிரதமருக்குத் தெரியப்படுத்தி பாதுகாப்புத் தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தோம். தாக்குதல்கள் ஆரம்பித்து சில நிமிடங்களில் 2,000 முதல் 3000 பேர்வரை கூடிவிட்டனர். பெருந்தொகையானவர்கள் கூடியமையால் அவர்களை கண்ணீர்புகைக்குண்டுத் தாக்குதல் நடத்திக் கலைக்க முடியாது எனப் பொலிஸார் கூறிவிட்டனர். இதனாலேயே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் பெற்றோல் ஊற்றப்பட்டுள்ளது தீப்பொறியொன்றைத் தட்டிப்போடவேண்டிய நிலைமையே காணப்படுகிறது. அவ்வாறானதொரு சிறிய தீப்பொறியையே மே 13ஆம் திகதி சிலர் தட்டிப்போட்டிருந்தனர். எனினும் அரசாங்கம் விரைந்து செயற்பட்டமையால் ஏனைய பகுதிகளில் இது பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை