ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்கள் நாடுதிரும்ப உத்தரவு

அவரச – அவசிய பணிகளில் இல்லாத தமது அரச பணியாளர்களை ஈராக்கில் இருந்து வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. பிராந்தியத்தில் ஈரானுடனான பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலிலேயே அமெரிக்கா இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

பக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் எர்பிலில் இருக்கும் துணைத்தூதரகத்தில் உள்ள பணியாளர்களை வெளியேறும்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“இரு நிலைகளிலும் சாதாரண விசா சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முடியுமான விரைவில் இவர்களை வெளியேறும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் எத்தனை பணியாளர்கள் வெளியேறுகின்றனர் என்பது தெளிவாகவில்லை.

ஈராக்கில் இருக்கும் தமது துருப்புகள் மீதான ஈரானின் அச்சுறுத்தல் பற்றி அமெரிக்கா கடந்த செவ்வாயன்று கவலை வெளியிட்டிருந்தது. எனினும் இதனை ஒரு உளவியல் போர் என்று ஈரான் குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு மேலதிக துருப்புகளை அனுப்பி இருப்பதோடு அதில், விமானதாங்கிக் கப்பல், பி-52 குண்டு விசும் விமானம் மற்றும் ஏவுகணை ஏதிர்ப்பு முறை அகியவை உள்ளடங்கும். தமது துருப்புகளுக்கு இருக்கும் அச்சுறுத்தல் மற்றும் பிராந்தியத்தின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்திருந்து.

அமெரிக்காவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் புரட்சிப் படையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவர் எச்சரித்திருந்தார். இந்நிலையில் பாதுகாப்பு நடைமுறையாகவே தூதரக ஊழியர்கள் வெளியேற்றப்படுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை