இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்; முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

மேற்குலகின் இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரம் உலகளாவிய மட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்பான சந்தேகத்தையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் இன்று அது இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பெயரில் பரவலாக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

அடிப்படைவாதம், பயங்கரவாதம், இனவாதம் எதனையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதேபோன்று தற்கொலைக்கும் இஸ்லாத்தில் இடமில்லை. சிலரது தவறான எடுகோள்களை இஸ்லாமிய கோட்பாடுகளாக காட்ட முனைவதன் காரணமாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக் கால நிலைமைகள் தொடர்பாக கேட்டபோது இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தினகரனுக்கு தெளிவுபடுத்தும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்த இஸ்லாமிய மதவாதச் சிந்தனையை முழுமையாக இல்லாதொழிக்கும் பொறுப்பு முஸ்லிம் சமூகத்திற்கும் இலங்கையர்கள் அனைவருக்கும் உள்ளது. உலகின் பலம் வாய்ந்த ஊடகங்கள் என்று தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் சில மேற்குலக ஊடகங்கள் முஸ்லிம்களை தாடி வளர்த்து துப்பாக்கிகளை கையிலேந்தியவர்களாகவே சித்தரிக்க முயற்படுகின்றன. முழு உலகுக்கும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவே காட்டி வருகின்றன.

இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் எம்மை பெரும் கவலைகொள்ளச் செய்பவையாகவே பார்க்க முடிகிறது. நாட்டு மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அச்சம் பீதிகொண்ட நிலையில் காணப்படுகின்றனர். முஸ்லிம்கள் என்று பேசும்போது வெறுப்புடன் நோக்கும் ஒரு நிலையை சில சக்திகள் தோற்றுவித்துள்ளன. மனிதாபிமானம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. எமக்கிடையே மாற்றம் தேவைப்பட்டுள்ளது. எமது மனநிலை மாறாதவரை இந்தச் சவால்களை எம்மால் வெற்றிகொள்ளமுடியாது.

ஏனையவர்களிடமிருந்து நாம் எந்தளவு மாற்றம் கண்டுள்ளோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மேற்குலகம் காட்டும் முஸ்லிம்கள் தொடர்பான பயங்கரவாத பிம்பத்தை அழித்தொழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான எமது பணியை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். ஏனெனில் இலங்கையில் இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடல் வளரத் தொடங்கிவிட்டது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதனை புரைபோட இடமளிக்கப்படக்கூடாது.

எந்த விடயத்திலும் நாம் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இதனை நான் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டும் சொல்லவில்லை. சகல தரப்பினருக்கும் இது பொருத்தமானதாகும். ஒன்றுக்குப் பல தடவை சிந்தித்தோமானால் எமது பயணத்தில் சறுக்கல் ஏற்பட இடமேற்படாது. நாம் பாதையை சீர் செய்துகொண்டு பயணிக்க வேண்டும். எதிர்காலம் நம்பிக்கையுள்ளதாகவும் பலம்மிக்கதாகவும் மாறவேண்டும். அதற்கான பணிகளை நாம் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும் எனவும் இம்தியாஸ் பார்க்கீர் மாக்கார் தெரிவித்தார்.

எம்.ஏ.எம் நிலாம்

 

Sat, 05/18/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக