தாக்குதல்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக் குழு

சபையில் ஐ.தே.க யோசனை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரான, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக பொருளாதார ரீதியில் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளோம். நாட்டின் எதிர்காலத்திற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. இதிலிருந்து மீண்டெழ வேண்டும். நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சியினர் தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னர் மினுவாங்கொடை, வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கான யோசனையை ஐ.தே.க. இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது என்றார்.

இதேவேளை, அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், நாளைய தினம் (இன்று) ஐ.தே.கவின் பாராளுமன்ற குழு பாராளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமெனடுப்போம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை