சகல முஸ்லிம்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட காத்திருப்பதாக கூற முயல்வது துரதிஷ்டம்

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தேடுதல்களில் வாள்கள் மற்றும் கத்திகள் மீட்கப்படுவதை அடிப்படையாக வைத்துக்கொண்டு நாட்டிலுள்ள சகல முஸ்லிம்களும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு காத்திருப்பதாக அர்த்தம் கற்பிக்க முயல்வது துரதிஷ்டவசமானது அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேடுதல்களின் போது மீட்கப்படும் ஆயுதங்கள் தொடர்பில் இலத்திரனியல் ஊடகங்களினால் வழங்கப்படும் தேவையற்ற பிரசாரத்தினால் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்சமும் பதற்றமுமே ஏற்படுத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

விசேட வியாபார பண்ட அறவீடுகள் கட்டளைகளை அங்கீகரிப்பது மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டில் உள்ள மக்கள் அச்சமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதுடன், அவர்களை அச்சுறுத்தும் வகையிலான சில செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தேவையற்ற பதற்றங்களைக் குறைத்து சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதில் ஊடகங்களுக்கும் கணிசமான பொறுப்பு உள்ளது. தற்போதைய இலத்திரனியல் ஊடகங்களை எடுத்துக்கொண்டால் அவை சகல சம்பவங்களையும் மேலும் உணர்ச்சியூட்டும் வகையில் வெளியிடுகின்றன. மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளையே அந்த ஊடகங்கள் தேடுகின்றன. இந்த விடயம் சரியான முறையில் கையாளப்பட வேண்டும்.

மக்கள் மத்தியில் காணப்படும் பரபரப்பை குறைப்பதற்கான தேவையை உணர்ந்து ஊடகங்கள் செயற்படவேண்டியுள்ளது. சகல இடங்களிலும் தேடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சில பகுதிகளில் தேடுதல்களுக்குச் செல்லும்போது ஊடகங்களையும் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். இவை தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

இதுஇவ்விதமிருக்க, பாதுகாப்புத் தரப்பினர் பெரும்பாலான இடங்களில் பொறுப்புடன் செயற்பட்டு வருவதுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படக்கூடாது. சகலரையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கையாளாமல், குறைந்த சந்தேகம் உள்ளவர்களை ஏனைய சட்டங்களின் கீழ் கையாள முடியும். நீண்டகாலம் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தால், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகள், சாதாரண சட்டத்தை மறந்து விடுகின்றனர் என்றார்.

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை