வலைத்தளங்களை கண்காணிக்க தனி பொலிஸ் பிரிவு

வதந்திகள் வைரலாவதை தடுக்க நான்காவது முறையாகவும் தடை

சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கவென தனியான பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துகளையும் பதிவுகளையும் மேற்கொண்டால், அவசரகால சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

அதேநேரம், சமூக வலைத்தளங்கள் மீதான தடை நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தளர்த்தப்படுமென அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவா நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.  

இத்துடன் நான்காவது தடவையாக இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்  அனைத்தும் நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட குறுகிய காலத்துக்கான தற்காலிக முடிவு என்றும் அவர் கூறினார். சமூக வலைத்தளங்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கப்படுமா? என்பது தொடர்பில் தினகரன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கே அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

"நாட்டு நிலைமை அடிப்படையிலேயே உடனடி அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளோம். அசாதாரண சூழ்நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். கண்டியில் இடம்பெற்ற கலவரத்தின்போது முதற் தடவையும் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து மூன்று தடவைகளுமென இதுவரை நான்கு தடவைகளுக்கு சமூக வலைத்தளங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் குறுகிய காலத்துக்கு மேற்கொள்ளப்பட்ட தற்காலிகத் தடை," என்றும் அவர் கூறினார்.

அடுத்த கட்டமாக நாட்டின் நிலவரம் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அனைத்து பிரதேசங்களிலும் அமைதியும் சுமுக நிலையும் ஏற்படுமாயின் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பேஸ்புக் மீதான தடையை அந்நிறுவனம் கண்டித்துள்ளதா? என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது உத்தியோகப்பூர்வமாக எமக்கு அதுபற்றி எதுவும் அறியத்தரப்படவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

 லக்ஷ்மி பரசுராமன், ஸாதிக் ஷிஹான் 

Wed, 05/15/2019 - 08:28


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக