அமெரிக்கா வழங்கிய கப்பல் கொழும்பு வந்தடைந்தது

அமெரிக்காவிடமிருந்து இலங்கையால் பெற்றுக் கொள்ளப்பட்ட 'ஷேர்மன்' கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கையின் கடற் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா இந்தக் கப்பலை வழங்கியிருந்தது.

கப்டன் ரோஹித்த அபயசிங்க, 22 கற்படை அதிகாரிகள் மற்றும் 111 மாலுமிகளுடன் இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியலால்.டி.சில்வா, கடற்படையின் பிரதானி

ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன மற்றும் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நிரா அத்தியகல உள்ளிட்ட பலரும் இந்தக் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அமெரிக்காவின் ஹவாய், ஹொனுலுலு துறைமுகத்தில் ஷேர்மன் கப்பலை, அமெரிக்காவின் பிரதிப் பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஹைகொக்கிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்தார். 115 மீற்றர் நீளமான இந்தக் கப்பல் சகல ஆயுத வசதிகளையும் கொண்டதாகக் காணப்படுகிறது. ஆள்கடல் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் இது பயன்படுத்தப்படவுள்ளது.

இந்தக் கப்பல் முன்னர் அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகும்.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை