என் மீதான குற்றச்சாட்டுக்கள் பழிவாங்கும் நோக்குடையவை

மனிதாபிமான உதவிக்காகவே இராணுவத் தளபதியைத் தொடர்பு கொண்டேன்

பாராளுமன்றத்தில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்ற போலியான குற்றச்சாட்டுக்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தெரிவுக்குழு அமைத்து விசாரணைகளை முன்னெடுப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையென்றும், மனிதாபிமான அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர் குறித்து இராணுவத் தளபதியிடம் விசாரித்ததாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சியினர் நேற்று சபையில் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்

போலியானவை என்பதுடன், தன்னைப் பழிவாங்கும் நோக்கில் அரசியல் தேவைக்காக சிலர் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருப்பதாகவும் கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், எனக்கு ஆலோசகராக மௌலவி எவரும் இல்லை. எனது சகோதரர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறுவதும் பொய்யானது. எனது அமைச்சின் இணைப்புச் செயலாளர் எவரும் கைது செய்யப்படவுமில்லை.

எனக்குத் தெரிந்தவரும், முஸ்லிம் சமய விவகார அமைச்சில் ஆலோசகாராக பணிபுரிபவருமான ஒருவர், தனது மகனை முகமூடி அணிந்த சிலர் கைது செய்து அழைத்துச் சென்றதாக எனது கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் துன்பப்பட்டிருக்கும் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டே இராணுவத் தளபதியைத் தொடர்புகொண்டு அந் நபர் பற்றி வினவியிருந்தேன். இதுபற்றி முதலில் அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவைத் தொடர்புகொண்டிருந்தேன். பொலிஸார் அவ்வாறான ஒருவரை அழைத்துச் செல்லவில்லை என்று கூறி இராணுவத் தளபதியிடம் அறிந்து கொள்ளுமாறு தெரிவித்தார்.

அந்த வகையிலையே நான் இராணுவத் தளபதியுடன் தொடர்புகொண்டு அவர் பற்றி விசாரித்தேன், எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்பு கொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டுமே தன்னிடம் விடுத்தாகவும், அவர் தனக்கு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை எனவும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தன்னிடம் கூறியதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை