தமிழ்த் தலைவர்களுக்கு இழைத்த தவறை ரிசாட் போன்றோருக்கு செய்யாதீர்கள்

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ் தலைவர்களை பாராளுமன்றத்திலிருந்து விரட்டி ஆயுதக் குழுக்கள் தலைதூக்குவதற்கு வழியேற்படுத்தியதுபோன்றதொரு நிலையை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்திவிடக் கூடாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.  ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் தலைவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எவ்வித விசாரணைகளும் நடத்தப்படாமல் நம்பிக்கையில்லா பிரேரணையினை முன்னெடுப்பது அடிப்படையற்றது என்றும் அவர் கூறினார்.  

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைக் குறிப்பிட்டார்.  

1983ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களை அப்போதைய ஆளும் கட்சியாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்திலிருந்து விரட்டியது. மகஜன கட்சியைச் சேர்ந்த நாம் அப்போதே அதனை எதிர்த்திருந்தோம். அதன் பின்னரே தமிழ் ஆயுதக் குழுக்கள் வலுப்பெற்றன. பிரபாகரன், உமாமகேஸ்வரன் போன்றவர்கள் உருவாகி ஆயுதங்களினால் பேசத் தொடங்கினார்கள். சிங்கள கடும்போக்குவாதத் தலைவர்களை தமிழ் ஆயுததாரிகள் எதுவும் செய்யவில்லை. எம்மைப்போன்று மிதவாத சிங்களத் தலைவர்களையே இலக்குவைத்தனர்.  

அதுபோன்று ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் தலைவர்களை பாராளுமன்றத்திலிருந்து நீக்கி பயங்கரவாதிகள் உருவாவதற்கு வழி ஏற்படுத்திவிடக்கூடாது. மீண்டும் சிங்கள மிதவாதத் தலைவர்களை இலக்குவைக்கின்றனர். ஒரு இனவாதத்தினால் மற்றுமொரு இனவாதம் பலப்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.  

தவறுசெய்த எவரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாரிய நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவுக்குச் சென்று சதொச நிறுவனத்துக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளித்திருந்தார்.  

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஆட்சிமாற்றத்துக்கு முயற்சித்தவர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் இழுப்பதற்கு முயற்சித்தனர். எனினும், முஸ்லிம் தலைவர்கள் உறுதியாக இருந்தமையால் எவரும் எதிர்க்கட்சிபக்கம் செல்லவில்லை. அன்று ரிஷாட் பதியுதீன் அவர்களுடன் சென்றிருந்தால் இன்று எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி அரசாங்கத்தை முன்கொண்டு சென்றிருப்பார்கள்.

தற்பொழுது அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அரசியல் நோக்கத்தைக் கொண்டது எனவும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.  

(மகேஸ்வரன் பிரசாத்)

Tue, 05/28/2019 - 10:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை