ஹட்டன் –கண்டி வழித்தட பஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு

நாவலப்பிட்டி பஸ் தரிப்பிடத்தில் பஸ் வண்டிகளை  நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹட்டனிலிருந்து கண்டி வரை சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பஸ் வண்டிச் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று (24) காலை முதல்  ஹட்டன் டிப்போ அரச பஸ் சேவை உறுப்பினர்களும், ஹட்டனிலிருந்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளின் சாரதிகளும் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களுக்கு நாவலப்பிட்டி பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி செல்லும் இப்பஸ்களை ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சாரதிகள்  தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் பஸ்களுக்கு, நாவலப்பிட்டி பிரதான பஸ் தரிப்பிடத்தில் பஸ்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இப்பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, தொழிலுக்கு செல்லும் உத்தியோகத்தர்களும், ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலை மற்றும் கண்டி  வைத்தியசாலைக்கு செல்வோர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(நோட்டன் பிரிஜ் நிருபர்- எம் கிருஸ்ணா, கிருஷாந்தன் -ஹற்றன் சுழற்சி நிருபர்)   

 

Fri, 05/24/2019 - 10:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை