வடக்கு -கிழக்கு அபிவிருத்திக்கு பனை அபிவிருத்தி நிதியம்

திறைசேரி மூலம் ரூ 50 பில். ஒதுக்கீடு

எம்.பிக்களின் திட்டங்களுக்கு நிதி வழங்க ஏற்பாடு

பிரதமரினால் நேற்று ஆரம்பித்து வைப்பு

யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள வடக்கு கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செயற்வதற்காக பனை அபிவிருத்தி நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்காக விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து நிதிகளையும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக முறையான விதத்தில் செலவிடுவதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமென்று பிரதமர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்காக தேவையான நிதியைப் பெற்றுத் தருமாறு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பனை அபிவிருத்தி நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வகையில் அப்பிரதேசங்களில் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த நிதியத்தின் மூலம் நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் பனை அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிதியத்தின் மூலம் வடக்கு கிழக்கு

பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்திகளை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அழிவுற்ற பகுதிகளை முன்னேற்றுவதற்காக நாம் இந்த நிதியத்தை ஆரம்பித்துள்ளோம்.

அபிவிருத்திக்கான நிதியை அந்தந்த பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிதியத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சர் இதற்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தந்த பிரதேச அபிவிருத்திகளுக்காக சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது யோசனைகளையும் முன்வைக்க முடியும். அதற்கிணங்க நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிதியத்திற்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காக “கம்பெரலிய” செயற்றிட்டத்தின் மூலம் 7 பில்லியன் ரூபா நிதியை நாம் வழங்கவுள்ளோம். இதற்கிணங்க வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காக இந்த வருடத்தில் மூலதன செலவாக 50 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எனக்குத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 2000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் யுத்தத்தினால் அழிவடைந்துள்ள வீடுகளை புனரமைப்புச் செய்வதற்கும் செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்படும். அதேவேளை எண்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் மூலம் அப்பிரதேசங்களுக்கு கடன்கள் பெற்றுக்கொடுக்கப்படும். எமது அரசாங்கத்தின் மூலம் 22,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க சேவையில் நியமனங்களை வழங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். அதன் ஒரு பகுதியை நாம் வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு பெற்றுக்கொடுப்போம். இதற்கிணங்க வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் அப்பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அதேபோன்று நாட்டின் ஏனைய பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக நிதியமைச்சு வழங்கும் ஊக்குவிப்புக்கள் தொடர்பில் நிதியமைச்சு விரைவில் நாட்டுக்கு தெளிவுபடுத்தும். (ஸ)

 

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை