நெதன்யாகுவின் கூட்டணி முயற்சி தோல்வி: இஸ்ரேலில் புதிய தேர்தல்

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கூட்டணி அரசொன்றை அமைப்பதில் தோல்வி அடைந்ததை அடுத்து பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இஸ்ரேல் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு புதிய தேர்தலுக்கு வித்திட்டிருப்பதோடு வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலுக்குப் பின் புதிய வலதுசாரி கூட்டணி அரசொன்றை அமைப்பதில் நெதன்யாகு தோல்வி அடைந்துள்ளார்.

பழைமைவாத யூத கல்லுௗரி மாணவர்களும் கட்டாய இராணுவ பயிற்சியில் பங்கேற்கும் சட்டமூலமே புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படுவதற்கு காரணமாகி உள்ளது.

பிரதமர் ஒருவர் கூட்டணி ஆட்சி ஒன்றை அமைப்பதில் தோல்வி அடைந்திருப்பது இஸ்ரேல் வரலாற்றில் இது முதல் முறையாகும்.

கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு நெதன்யாகுவுக்கு இருந்த கடந்த புதன்கிழமை நள்ளிரவு வரையான காலக்கெடு முடிவுற்றதை அடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பாராளுமன்றத்தைக் கலைக்க ஆதரவாக 75 வாக்குகள் பாதிவானதோடு எதிராக 45 வாக்குகள் பாதிவாகி இருந்தது.

120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 35 இடங்களை வென்றதை அடுத்தே அது கூட்டணி ஆட்சி ஒன்றை அமைக்க முயற்சித்தது. இது அவர் ஐந்தாவது தவணைக்கு பிரதமராக பதவி ஏற்பதற்கான முயற்சியாக இருந்தது.

எனினும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டர் லிபர்மானின் ஆதரவை பெறுவது நெதன்யாகுவுக்கு தீர்க்கமாக இருந்தது.

எனினும் லிபர்மானின் தேசியவாத யிஸ்ராயேல் பெய்னு கட்சி பழைமைவாத யூதக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சியானது கட்டாய இராணுவப் பயிற்சியில் பழைமைவாத யூத மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதற்கு கோரி வருகிறது.

இந்நிலையில் புதிய ஆட்சி அமைப்பதற்கு மற்றொரு உறுப்பினருக்கு ஜனாதிபதி ரியுவன் ரெவிலின் அழைப்பு விடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே நெதன்யாகு புதிய தேர்லுக்காக வழி ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வாக்கெடுப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசி நெதன்யாகு, “எமக்கு வெற்றியைத் தரும் தெளிவான, மற்றும் கூர்மையான தேர்தல் பிரசாரம் ஒன்றை நான் மேற்கொள்ளவுள்ளேன். நாம் வெற்றி பெறுவோம்” என்று உறுதியாக குறிப்பிட்டார்.

வரும் ஜுலை மாதத்தில் இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக பதவி வகித்தவர் என்று நெதன்யாகு சாதனை படைக்க இது வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வரும் செப்டெம்பர் மாதம் தேர்தல் வரை இஸ்ரேல் பிரதமராக நீடிப்பார்.

கடந்த ஏப்ரலில் நெருக்கமாக போட்டி நிலவிய தேர்தல் போன்றே எதிர்வரும் தேர்தலும் இருக்கும் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் தேர்தலில் நெதன்யாகு தனக்கு மிக நெருக்கடியான போட்டியாளரான முன்னாள் இராணுவ தலைமை அதிகாரி பென்னி காட்ஸை எதிர்கொண்டார்.

120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இதுவரை காலத்தில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற்றதில்லை என்பதோடு அங்கு எப்போதும் கூட்டணி ஆட்சியே இடம்பெற்று வருகிறது.

இதன்படி அதிக ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவர் பிரதமராக வரவேண்டி தேவை இல்லை என்பதோடு அதிக கட்சிகளை கூட்டணி சேர்த்து குறைந்தது 61 ஆசனங்களை காண்பிக்கும் ஒருவருக்கு பிரதமர் பதவியை வகிக்க முடியும்.

இந்நிலையில் நெதன்யாகு எதிர்வரும் மாதங்களில் தன் மீதான இலஞ்சம் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்புவதற்கு வரப்பிரசாதங்களை பெறுவதற்கு முயற்சித்ததாக நெதன்யாகு மீது குற்றச்சாட்டு உள்ளது.

செல்வந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்து அன்பளிப்புகளைப் பெற்றதாக நெதன்யாகு மீது குற்றச்சாட்டு உள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார்.

அவர் குற்றச்சாட்டுக்கு உள்ளானால், அவர் தனது பதவியை இராஜினாமா செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும்.

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை