முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயற்சி

நாசகாரக் கும்பலை சட்டத்தின் முன் நிறுத்த தொடர்ந்தும் ஒத்துழைப்போம்

*சம்பவத்தின் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும்

*ஊடக தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டுகோள்

முஸ்லிம் தலைவர்கள்

முழு முஸ்லிம் சமூகத்தையே பயங்கரவாதிகளாக, தீவிரவாதிகளாக பெரும்பான்மை மக்கள் முன் காண்பித்து இனவாதத்தை தூண்டி நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல முனையவேண்டாமென முஸ்லிம் ஆத்மீக, அரசியல், சிவில் சமூக தலைமைகள் கூட்டாக நேற்று பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

பயங்கரவாதத்தை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. பயங்கரவாதத்தையும், தற்கொலையையும் கைகளில் எடுப்பவர்கள் இஸ்லாத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்த இந்தக் கூட்டுத் தலைமைகள் தேவாலயத் தாக்குதல் கொடூரச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள், இவ்வாறானவற்றுக்கு உதவுபவர்கள், ஒத்துழைப்பவர்கள் அனைவரையும் கண்டுபிடிப்பதில் பாதுகாப்புத் தரப்புக்கு முழுமையாக ஒத்துழைக்க தயார் எனவும் தெரிவித்தனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி மென்டேரியின் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே இவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த ஊடகச் சந்திப்பில் பங்கேற்றனர்.

முஸ்லிம் சமூகம், அமைதியை விரும்பும் ஒரு சமூகம். ஏப்ரல் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவம் எந்தவொரு மனிதராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வெறுக்கத்தக்க செயலாகவே நாம் கருதுகின்றோம். இந்த பயங்கரவாதச் செயற்பாட்டை கடுமையாக கண்டிக்கின்றோம். இந்தச் சம்பவத்தால் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் நாடு பின்னடைவை நோக்கியுள்ளது.

எனினும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் சில ஊடகங்கள் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாத சமூகமாக காண்பிக்கும் வகையிலேயே தகவல்களை வழங்கிக்கொண்டிருக்கின்றன. ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். நேர்மையுடனும், ஊடக தர்மத்தின் படியும் செயற்பட முன்வரவேண்டும். சிலர் ஊடக தர்மத்தை கொச்சைப்படுத்தும் விதத்திலும், ஊடகத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும் இயங்கிக்கொண்டிருப்பதையிட்டு கவலைகொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பிட்ட சிலரது தவறுக்காக முழு முஸ்லிம் சமுதாயத்தையும் பயங்கரவாதிகளாக காட்ட முனைவது விசாரிக்கத்தக்கதாகும். அதே சமயம் பயங்கரவாதத்துடன் யாராவது தொடர்புபட்டவர்களாக காணப்படுமிடத்து அவர்களை அடையாளப்படுத்தி சட்டத்தின் முன் பிடித்துக்கொடுக்க முஸ்லிம் சமூகம் ஒருபோதும் பின்வாங்காது. இது விடயத்தில் அரசுடனும், பாதுகாப்புத் தரப்புடனும் இணைந்து செயற்படுவோம் எனவும் இங்கு வலியுறுத்திக் கூறப்பட்டது.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஐ. ரிஸ்வி முப்தி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை முஸ்லிம் ஆன்மீக, அரசியல், சிவில் சமுதாயம் ஒரே குரலில் கண்டிக்கின்றன. எமது தாய் நாட்டில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதை கடுமையாக கண்டிக்கின்றோம். இநேநேரம் தாக்குதலின் பின்னர் ஏற்பட இருந்த பாரிய அனர்த்தத்தை தவிர்த்து அமைதியை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கர்தினால் ​ெமல்கம் ரஞ்சித்துக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கு நாம் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

முஸ்லிம் சமூகம் சந்தேகத்திடமான தகவல்களை வழங்கி பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. அதேநேரம் இஸ்லாத்தின் பெயரால் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர் என்பதை உறுதிபடத் தெரிவித்திருக்கின்றனர்.

அதேநேரம் தாக்குதல் நடத்தியவர்கள் சடலங்களை முஸ்லிம் சமய முறைப்படி அடக்கம் செய்வதையும் நிறுத்திவிட்டனர். அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பதே எமது நிலைப்பாடு.

நெருக்கடியான நிலையில் இந்த நாட்டு முஸ்லிம்கள் பாதுகாப்பு பொறிமுறைக்கும் படையினரின் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதையிட்டு மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இக்கட்டான நிலையில் ஊடகங்கள் தமது ஊடகத் தர்மத்தை மீறாமலும் செயற்பட வேண்டுமென நாம் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர்கள்சார்பில் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது:-பாதுகாப்பு நடவடிக்கைகளின் போதும் தேடுதல் நடவடிக்கைகளிலும் முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். முஸ்லிம்கள் பொறுமையுடன் செயற்பட்டு வருகின்றனர். உயிர்த்தெழுத்த ஞாயிறன்று இடம்பெற்ற மிலேச்சத்தனமான செயற்பாட்டை முஸ்லிம்கள் அப்போதும் ஆதரிக்கவில்லை. அதனை இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. ஈனத்தனமாகச் செயற்படும் இந்தக் கும்பல் வளர்வதற்கு இடமளிக்க முடியாது. அவர்களை ஒழிப்பதற்கு தாம் ஒன்றுபட்டு ஒத்துழைப்போம்.

அதே சமயம் ஊடகத்துறையில் சிலரது செயற்பாடுகள் வேதனை தருவதாகக் காணப்படுகின்றது. இவர்கள் ஊடகத் தர்மத்தை மீறிச் செயற்படுகின்றனர். இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக சித்தரித்து பெரும்பான்மைச் சமூகத்தின் முன்பாக காட்டி வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு தடைக்கற்களாகவே காண முடிகிறது. தயவு கூர்ந்து ஊடகங்கள் ஊடகத் தர்மத்தை பேணி நடந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

இலங்கை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் கருத்துத் தெரிவித்தபோது.

கடந்த 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல் சம்பவத்தை இந்த நாட்டு முஸ்லிம் மக்களில் 99 சதவீதத்தினரும் கடுமையாக கண்டிக்கின்றனர். முஸ்லிம் பெயரில் இயங்கிய இந்த நாசகாரக் கும்பல் இஸ்லாத்திலிருந்து தூரமாக்கப்பட்டவர்களாவர்.

இப்படியொரு சம்பவம் நடக்கப்போவது குறித்து எவருக்குமே தெரியாது. குண்டுதாரியின் மனைவிக்குக் கூட இது தெரியாது. கொலையும், தற்கொலையும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவை. இதனை அனுமதிக்க முடியாது.

இந்தச் சம்பவத்தின் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறான வழியில் செல்லும் இளைஞர்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

பெற்றோர்கள், குடும்பத்தவர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டும்.

ஊடக சகோதரர்கள் ஊடக தர்மத்தைப் பேண வேண்டும். அண்மைக் காலத்தில் சில ஊடகங்களில் முஸ்லிம்கள் தொடர்பில் தவறான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அதனைச் சுட்டிக்காட்டினால் கூட கண்டுகொள்ளப்படவில்லை. பத்திரிகை தர்மத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடாதீர்கள் என்பதே எனது வேண்டுகோளாகும்.

எம்.ஏ. எம். நிலாம்

 

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை